2018-02-17 13:38:00

இமயமாகும் இளமை : மரணத்தை மடியில் சுமக்கும் இளையோர்


அமெரிக்கப் பழங்குடியினரிடையே, ஓர் இளைஞன், வயதுக்கு வரும் வேளையில், தன்னையே சக்திமிகுந்த ஒரு வீரனாக மாற்றிக்கொள்ள, அவர், சில நாட்கள், காட்டிலும் மலையிலும் தனியே தங்கவேண்டும் என்ற வழக்கம் பின்பற்றப்பட்டது. இந்தச் சமுதாயச் சடங்கில் ஈடுபட்டிருந்த ஓர் இளைஞன், ஒரு நாள் பனி படர்ந்திருந்த ஓர் உயர்ந்த மலையுச்சியைச் சென்றடைந்தார். உலகின் உச்சியை அடைந்துவிட்டதைப் போன்ற வெற்றிப் பெருமிதத்துடன் அவர் அங்கு நின்றுகொண்டிருந்தபோது, காலடியில், ஒரு கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்து வந்ததைப் பார்த்தார். அந்தப் பாம்பு இளைஞனிடம் பேசியது: "நான் இந்தப் பனியில் இருந்தால், விரைவில் இறந்துவிடுவேன். எனவே, தயவுசெய்து என்னை உன் கம்பளிப் போர்வைக்குள் வைத்து, கீழே எடுத்துச்சென்று, அங்கே என்னை விட்டுவிடு. உனக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்" என்றது. இளைஞன் பாம்பிடம், "உன் குணம் எனக்குத் தெரியும். நான் உன்னைக் கையில் எடுத்தால், என்னைக் கடித்துக் கொன்றுவிடுவாய்" என்றார். பாம்பு அவரிடம், "கட்டாயம் இல்லை. உன்னிடம் நான் அப்படி நடந்துகொள்ளவே மாட்டேன்" என்று சத்தியம் செய்தது. இளைஞன் தயங்கியபோதிலும், கட்டுவிரியன், நயமாகப் பேசி, அவரைச் சம்மதிக்க வைத்தது.

இளைஞன், தன் கம்பளிப் போர்வைக்குள் பாம்பை வைத்துக்கொண்டு, கீழே இறங்கினார். சமவெளியை அடைந்ததும், பாம்பை எடுத்து தரையில் விட்டபோது, கட்டுவிரியன், திடீரென, இளைஞனைக் கடித்தது. "என்னைக் கடிக்கப் போவதில்லை என்று சத்தியம் செய்தாயே" என்று இளைஞன் அச்சத்துடன், ஆத்திரத்துடன் அலறினார். பாம்பு அவரிடம், "மலையுச்சியில் என்னை நீ கையில் எடுத்தபோதே, என் குணம் உனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், என்னை ஏன் சுமந்து வந்தாய்?" என்று கேட்டுவிட்டு, அது தன் வழி சென்றது.

மரணத்தைக் கொணரும் பழக்கங்களை மனதில் சுமந்து திரியும் இளையோரின் கண்களை, இறைவன் திறக்கவேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.