2018-02-16 15:36:00

புளோரிடா பள்ளி வன்முறையில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்


பிப்.16,2018. “இயேசுவின் செய்தி, நம்மைக் குழப்பி, தொந்தரவு செய்கின்றது, ஏனெனில், இச்செய்தி, உலகப்போக்கு கொண்ட சமய அதிகாரத்திற்குச் சவால்விடுத்து, மனச்சான்றுகளைக் கிளறி விடுகின்றது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு புளோரிடா (Florida) மாநிலத்தின் Broward பகுதியில் உள்ள Marjory Stoneman Douglas உயர் நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன், ஆன்மீக ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாக்குதலில் இறந்தவர்கள் இறைவனில் இளைப்பாறவும், இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், திருத்தந்தை, தனது செபங்களையும் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையின் செபங்களும், ஒருமைப்பாட்டுணர்வும் நிறைந்த செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், மியாமி பேராயர் Thomas Gerard Wenski  அவர்களுக்கு , திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ளார்.

Marjory Stoneman Douglas பள்ளியின் முன்னாள் மாணவர், Nikolas Cruz என்ற 19 வயது இளையவர், பிப்ரவரி 14, இப்புதன் பிற்பகல் 2.40 மணியளவில் இந்தத் தாக்குதலை நடத்தினார் என்றும், அவரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. இத்தாக்குதலில், குறைந்தது 17 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.