2018-02-16 15:44:00

பதவி விலகுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வது பற்றி...


பிப்.16,2018. பதவி விலகுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வது பற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது கடிதம் பிப்ரவரி 15, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தந்தை, தனது சுயவிருப்பத்தின்பேரில் வெளியிடும் Motu Proprio எனப்படும் திருத்தூது கடிதத்தில், திருஅவையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பதவி விலகுவது குறித்து எழுதியுள்ளார்.

வயது காரணமாக பதவி விலகுதலையும், பல்வேறு காரணங்களால் பணியின் காலம் நீட்டிக்கப்படும் நிலையையும் எதிர்நோக்குகின்றவர்களுக்குத் தேவையான சில உள்ளார்ந்த எண்ணங்கள் குறித்த சிந்தனைகளை வழங்கியுள்ள திருத்தந்தை, அவர்கள் பதவியிலிருந்து விலகிய பின்னர் வாழும் முறையை செபத்தின் வழியாகத் தேர்ந்துதெளியுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

சிலர் 75 வயதுக்கு மேலும் பணியாற்ற கேட்கப்படலாம், இது திருத்தந்தையாக எடுக்கும் தீர்மானம் அல்ல என்றும், இது, நிர்வாகம் சார்ந்த நடவடிக்கை என்றும், தகுந்த தீர்மானம் எடுப்பதற்கு உதவுகின்ற, விவேகம் என்ற பண்பு இதற்கு அவசியம் என்றும், திருத்தந்தை, அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2014ம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்ட "Rescriptum ex audientia Ss.mi" என்ற ஏட்டின் நடைமுறைகளை அவ்வாறே ஏற்கும் அதேவேளை, அதில், எண் இரண்டில் சில மாற்றம் கொண்டுவர விரும்புவதாகவும், மேய்ப்புப்பணி பதவியிலிருந்து விலகுவது, சட்டமுறையான அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரத்திலிருந்து அமலுக்கு வரும்  என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

ஒரு மேய்ப்புப்பணி தலைவர், பதவி விலகும் கடிதத்தைச் சமர்ப்பித்த பின்னர், அது ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது அப்பணி நீடிக்கப்பட்ட காலம் குறித்து, அந்த நபருக்கு அறிவிக்கப்படும்வரை அவர் பதவியில் இருப்பார் என்றும், திருப்பீடத் தலைமையகத் துறைகளில் அல்லது திருத்தந்தையின் பிரதிநிதிகளாக, கர்தினால்களாக இல்லாமல் ஏனைய நிலையில் தலைவர்களாக இருப்பவர்கள், 75 வயதை எட்டியவுடன், பதவிக்காலம் தானாக முடிவுக்கு வராது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.