2018-02-16 15:32:00

உலக ஆயர்கள் மாமன்ற முன்தயாரிப்பு கூட்டத்தில் பல்சமய இளையோர்


பிப்.16,2018. இளையோர், விசுவாசம் மற்றும் அழைப்பைத் தேர்ந்து தெளிதல் என்ற தலைப்பில், வருகிற அக்டோபரில், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தை முன்னிட்டு, அதற்கு முன்தயாரிப்பாக, வருகிற மார்ச் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை வத்திக்கானில் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது.

இக்கூட்டம் பற்றி, இவ்வெள்ளியன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த கர்தினால் லொரென்சோ பால்திசேரி தலைமையிலான குழு, குருத்தோலை ஞாயிறுக்கு முந்திய வாரத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஐந்து கண்டங்களைச் சேர்ந்த ஏறத்தாழ முன்னூறு இளையோர் கலந்துகொள்வார்கள் என்று கூறியது.

இக்கூட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரைச் சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார் என்றும், இக்கூட்டத்தில் பெருமளவான இளையோர் கலந்துகொள்வதற்கு உதவியாக, இக்கூட்டத்தின் செயல்பாடுகள், இந்த மாமன்றத்தின் இணையதளம் (www.synod2018.va), முகநூல், டுவிட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில், பல மொழிகளில் வெளியிடப்படும் என்றும் இக்குழு கூறியது.

கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவ இளையோர், கிறிஸ்தவரல்லாத இளையோர், மத நம்பிக்கையற்ற இளையோர் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றும், கர்தினால் பால்திசேரி அவர்கள் கூறினார்.

மேலும், இக்கூட்டத்தில், இந்தியாவிலிருந்து, மூன்று கத்தோலிக்க, ஒரு சீக்கிய, ஓர் இந்து என, ஐந்து இளையோர் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

16 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட இளையோருக்கென, 15வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவிருக்கின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.