2018-02-15 14:39:00

இமயமாகும் இளமை..... : அடுத்த கட்டத்துக்குள் நுழைந்த இளம்பெண்


தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு மகிழ்ச்சியோடு சென்றுள்ள அந்த இளம்பெண், தனது வளர்ச்சியை இவ்வாறு விவரிக்கிறார்...

பழம் விற்பனை செய்யும் என் ஏழைத் தாய்க்கு, நான் படிக்கவில்லை என்று வருத்தம். அதனால் எனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தார். அப்படியே பழம் வெட்டும் முறையை அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டேன். ஒருநாள் ஒரு ஐஸ்க்ரீம் வண்டி வந்தது. குழந்தைகள் ஓடிச்சென்று ஐஸ்க்ரீம் வாங்கிச் சுவைப்பதை நான் ஏக்கமாகப் பார்ப்பதை அம்மா கவனித்தார். அன்னாசிப்பழத்தை ஐஸ் வடிவில் வெட்டி, அதில் ஒரு குச்சியைச் செருகி, ஐஸ் பெட்டியில் வைத்து `ஜில்'லாக்கி என்னிடம் கொடுத்தார் அம்மா. `ஐஸ் ஐஸ்' என்று சொல்லிச் சுவைக்கும் என்னைக் கண்டு அம்மா மகிழ்ந்தார். `அன்னாசிப்பழ ஐஸ் தயாரித்து நாமே விற்பனை செய்யலாமே’என்று அம்மாவிடம் கேட்டேன். ஆச்சர்யமடைந்த அம்மாவும் அப்படியே செய்துகொடுத்தார். ஐஸ் பெட்டியை வைத்துக்கொண்டு வீதியில் நின்று, `அன்னாசி ஐஸ் வாங்குங்க, அன்னாசி ஐஸ் வாங்குங்க’என்று குரல் கொடுத்தேன். ஆனால், ஒருவரும் என் பக்கம் திரும்பவில்லை. வருத்தத்துடன் வீடு திரும்பி அம்மாவிடம் சொன்னேன். உடனே அம்மா என்னிடம், சந்தைக்குச் சென்று, மற்ற வியாபாரிகள் எப்படி விற்பனை செய்கிறார்கள் என்று பார்த்து வா’என்று அனுப்பி வைத்தார். நான் சந்தையில் நின்று கவனித்தேன். `ஒரு பாக்கெட் மிளகாய் 5 ரூபாய்… மூன்று பாக்கெட் வாங்கினால் 10 ரூபாய்…’`ஒரு கிலோ தக்காளி 4 ரூபாய்... மூன்று கிலோ 10 ரூபாய்…’  இப்படி நிறைய விற்பனைக் குரல்கள் கேட்டன. நம்பிக்கையோடு வீடு திரும்பினேன். ஓர் அட்டையில் அன்னாசிப்பழ ஐஸ் படம் வரைந்து, வண்ணம் தீட்டினேன். ஓர் அன்னாசி ஐஸ் 5 ரூபாய் என்றும், மூன்று வாங்கினால் 10 ரூபாய் என்றும் எழுதினேன். மறுநாள் ஐஸ் பெட்டியுடன் வீதிக்குச் சென்று, மற்ற வியாபாரிகளைப் போலவே கூவினேன். குழந்தைகள் என்னை நோக்கி ஓடி வந்தார்கள். அன்னாசி ஐஸ் வேகமாக விற்பனையானது. நான் பிரச்சனையை எப்படியும் சமாளித்து விடுவேன் என்கிற நம்பிக்கை அம்மாவுக்குப் பிறந்து விட்டது. இனி நான் இல்லாவிட்டாலும், என் மகள் இந்தப் பூமியில் பிழைத்துக் கொள்வாள் என்று அம்மாவின் மனம் நிம்மதியடைந்தது.

இப்படி அன்னாசிப்பழ ஐஸ் விற்ற அந்தப் பெண், மூன்றாண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பட்டம் பெற்று, தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு மகிழ்ச்சியோடு நுழைந்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.