2018-02-14 15:13:00

திருத்தந்தையின் மறைக்கல்வி : விசுவாச அறிக்கையும் மன்றாட்டும்


காலை உரோம் உள்ளூர் நேரம் 8. 30 மணியிலிருந்தே மழை இலேசாக தூறிக்கொண்டிருக்க, சிறிய தூறலே என்பதாலும், திருப்பயணிகளின் கூட்டம் அதிகம் இருந்தமையாலும், புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்திலேயே திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை இடம்பெற்றது.

நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுள்ளும் இருந்தால், நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும், என இயேசு கூறிய, புனித யோவான் நற்செய்தி 15ம் பிரிவின் வார்த்தைகள் முதலில் வாசிக்கப்பட, திருத்தந்தையின், திருப்பலி குறித்த மறைக்கல்வி உரை தொடர்ந்தது.

அன்பு சகோதர சகோதரிகளே! திருப்பலி குறித்த நம் மறைக்கல்வி உரையில் இன்று, நம் விசுவாச அறிக்கை குறித்தும், கிறிஸ்தவ விசுவாசிகளின் தேவைகளை உள்ளடக்கிய உலகளாவிய செபம் குறித்தும் நோக்குவோம். வார்த்தை வழிபாட்டில், மறையுரை மற்றும் சிறிது நேர மௌனத்திற்குப்பின், திருப்பலியில் கூடியிருப்போர் அனைவரும், தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுகின்றனர். விசுவாச அறிக்கை என்பது, திருமுழுக்கு, திருப்பலி என்ற இரு அருளடையாளங்களையும் இணைக்கும் பாலமாக உள்ளது. அவ்வாறு அறிக்கையிடும்போது, நாம் செவிவழி கேட்டவைகளுக்கும், நாம் பெற்றுள்ளவைகளுக்கும் பதிலுரைக்கிறோம். இதுவே, திருப்பலி எனும் அருளடையாளத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றது.

அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை, அதாவது உரோமைய திருஅவையின் திருமுழுக்கு விசுவாச அறிக்கை, நன்முறையில் புரிந்துகொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், அதிலும் குறிப்பாக, தவக்காலம் மற்றும் உயிர்ப்புக் காலத்தில். குறிப்பாக, ஞாயிறு மற்றும், திருவிழா நாட்களில் நாம் அனைத்து விசுவாசிகளின் விண்ணப்ப செபங்களை இறைவன் முன்னிலையில் ஒப்படைக்கின்றோம். பரிசுத்த திருஅவைக்காகவும், சமூகத் தலைவர்களுக்காகவும், பல்வேறு தேவைகளின் காரணமாக ஒடுக்கப்பட்டிருப்பவர்களுக்காகவும், மனித குலமனைத்திற்காகவும், உலகமனைத்தின் மீட்பிற்காகவும், விண்ணப்ப செபங்களை ஒப்படைக்கிறோம். ஒவ்வொரு விசுவாசியின் விண்ணப்பத்தை, அதாவது, மன்றாட்டைத் தொடர்ந்து, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, 'ஆண்டவரே எம் மன்றாட்டை கனிவாய் கேட்டருளும்’, என்றோ, அதற்கு இணையான வார்த்தைகளுடனேயோ, இறைவன் தன் குழந்தைகளை பராமரிக்கிறார் என்ற முழு நம்பிக்கையுடன் செபிக்கிறோம்.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநீற்றுப் புதனிலிருந்து தவக்காலம் துவங்குவதை சுட்டிக்காட்டி, இளையோர், தவக்காலத்தை, இறையன்பை நோக்கித் திரும்பிவரும் காலமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், நோயுற்றோர், தங்கள் துன்பங்களை, விசுவாசத்தை விட்டு விலகி வாழும் மக்களின் மனமாற்றத்திற்காக பயன்படுத்தவேண்டும் என்றும், புதுமண தம்பதியர் தங்கள் புதிய குடும்பத்தை இறையன்பு எனும் பாறையின்மீது கட்டியெழுப்ப வேண்டும் என்றும், அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார். பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.