2018-02-13 15:36:00

மனித வர்த்தகம், மனித சமுதாயத்திற்கெதிரான குற்றம்


பிப்.13,2018. “விசுவாசத்தை வழங்குவதற்கு தூய ஆவியார் நமக்குத் தேவைப்படுகின்றார். நம்மால் அதைத் தனியாக ஆற்ற இயலாது” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று வெளியானது.

மேலும், மனித வர்த்தகம், மனித சமுதாயத்திற்கெதிரான குற்றம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று, தான் சந்தித்த, மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்ட இளையோரிடம் கூறினார்.

மனித வர்த்தகத்திற்கெதிரான செபம் மற்றும் சிந்தனை உலக நாளில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை, வத்திக்கானில் சந்தித்து, அப்பிரதிநிதிகளில் நான்கு இளையோர் கேட்ட  கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை, நவீன கால அடிமைமுறைக்குக் காரணமான கூறுகள் பற்றி விளக்கினார்.

அறியாமை, இந்த விவகாரத்தை ஏற்பதற்கு மனமின்மை, வெளிவேடம் ஆகிய மூன்றும், நவீன கால அடிமைமுறைக்குக் காரணங்கள் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து, அடிமைமுறையில் வாழ்வோர் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு இளையோருக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த உலக நாளையொட்டி, மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தது இதுவே முதன்முறையாகும். மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்ட 110 பேரை, இத்திங்களன்று சந்தித்தார் திருத்தந்தை. இச்சந்திப்பில், திருத்தந்தையிடம் கேள்வி கேட்ட நான்கு இளையோரில் இருவர், மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.