2018-02-13 15:32:00

பிப்ரவரி 13 உலக வானொலி தினம், ஐ.நா. செய்தி


பிப்.13,2018. சமூகத்தொடர்பு சாதனங்கள் வேகமாக முன்னேறிவருகின்ற இக்காலத்தில், மகிழ்விப்பது, கற்றுக்கொடுப்பது, தகவல்களை வழங்குவது, தூண்டுதல் கொடுப்பது ஆகியவற்றில், வானொலி வல்லமையுடையதாய் உள்ளது என்று, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் கூறியுள்ளார்.

பிப்ரவரி 13, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட, உலக வானொலி தினத்திற்குச் செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரெஸ் அவர்கள், வானொலி, சமூகங்களை ஒன்றிணைத்து, அவை முன்னேற உதவுகின்றது மற்றும், சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்காகக் குரல் கொடுக்கின்றது என்று கூறியுள்ளார்.

இவ்வாண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவரும் வேளையில், உலக வானொலி தினம் இடம்பெறுகின்றது என்றும், விளையாட்டுகள் குறித்த ஒலிபரப்புகள், மக்களை ஒருங்கிணைக்கின்றன மற்றும், அவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன என்றும் கூறியுள்ளார், ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரெஸ்.

‘வானொலியும் விளையாட்டுகளும்’ என்ற தலைப்பில், இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட உலக வானொலி தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள, யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் Audrey Azoulay அவர்கள், விளையாட்டு நிகழ்வுகளில் ஆர்வத்தைத் தூண்டிவிடுவதில், வானொலி ஒலிபரப்புகள் மிகவும் சக்திவாய்ந்தவையாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.