2018-02-12 16:21:00

திருத்தந்தை: சிறார் இராணுவ வீரர்கள் குறித்து வேதனையுறுகிறேன்


பிப்.12,2018. 'குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, சிறார் இராணுவ வீரர்களாக இணைக்கப்படுவது குறித்து ஆழ்ந்த வேதனையை உணர்கிறேன். இது ஒரு மிகப்பெரும் சோகம்', என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று தன் கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறு, லூர்து அன்னை திருவிழாவன்று சிறப்பிக்கப்பட்ட உலக நோயாளர் தினத்தையொட்டி, இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலையில் வெளியிட்ட டுவிட்டரில், 'நோயாளிகள் தங்கள் வலுவற்ற நிலையில் அன்புகூரப்பட்டு, மீற முடியாத மாண்பில் மதிக்கப்பட வேண்டும்' என விண்ணப்பித்துள்ளார்.

மாலையில் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 'மனித வாழ்விற்கு பணிபுரிவது என்பது, அனைத்து நிலைகளிலும் கடவுளுக்கும் வாழ்வுக்கும் பணிபுரிவதாகும், அதாவது, தாயின் வயிற்றில் உருவானது முதல், முதுமையில் துன்பங்கள் மற்றும் நோய்கள் வரை' என உரைத்துள்ளார் திருத்தந்தை.

மேலும், மனிதர்கள் தவறாக நடத்தப்படுவதற்கு எதிரான சிந்தனைகளையும் செபத்தையும் ஊக்குவிக்கும் உலக நாள், கடந்த வாரம் சிறப்பிக்கப்பட்டபோது கலந்துகொண்டோரை இத்திங்களன்று காலை, திருப்பீடத்தில் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.