2018-02-12 16:26:00

ஏழைகளோடு ஏழைகளாக வாழ்வதே நற்செய்தி அறிவிப்புக்கு பலம்


பிப்.12,2018. இம்மாதம் 23ம் தேதி, உலக அமைதிக்கான செப நாள் சிறப்பிக்கப்படும்போது, சிரியாவிற்காக சிறப்பான விதத்தில் செபிக்கப்படும் என, இத்திங்களன்று காலை கிரேக்க மெல்கித்திய ஆயர் மன்றத்தின் பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உறுதி கூறினார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் ஆழமாக வேரூன்றியுள்ள கிரேக்க மெல்கித்திய வழிபாட்டு முறை கத்தோலிக்க சபை, துன்பகரமான இந்தச் சூழல்களில், தங்கள் விசுவாச வாழ்வை உறுதியாக வாழுமாறும், அப்பகுதி மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

துன்புறும் மக்கள், தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறும் சோதனையை தடுக்கவும், ஒன்றிப்பிலும், ஒருமைப்பாட்டிலும், சாட்சிய வாழ்விலும், நெருக்கமாக வாழவும், கிரேக்க மெல்கித்திய திரு அவை அதிகாரிகள் உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை அதிகாரிகள் இவ்வுலக இன்பங்களில் ஆர்வம் காட்டாமல், விசுவாசிகளின் திருப்பயணத்தில் உடன் செல்பவர்களாக இருக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

துன்புறும் ஏழை மக்கள் நடுவே, இவ்வுலக சுகங்களை விட்டுக் கொடுத்து ஏழ்மையில் வாழும்போதுதான், உயிர்ப்பின் நம்பிக்கையை நாம் எடுத்துரைக்க முடியும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.