2018-02-08 15:41:00

வெறுப்பைத் தூண்டும் மொழியை விடுக்க அழைப்பு


பிப்.08,2018. இஸ்லாமிய மதத்தையும், முஸ்லிம்களையும், வழக்கமான வடிவங்களிலும், முற்சார்பு எண்ணங்களுடனும் பார்க்கும் கண்ணோட்டத்தைக் கடந்து செல்லவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஆயர் பேரவைகள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், பிப்ரவரி 7ம் தேதி முதல், 9ம் தேதி முடிய, அல்பேனியா நாட்டின் Shkoder நகரில் மேற்கொண்டுள்ள ஒரு கூட்டத்திற்கு, திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர், கர்தினால் Jean-Louis Tauran அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

அடிப்படைவாத போக்குடைய ஒரு சிலர் மேற்கொள்ளும் தவறான செயல்களை ஊடகங்கள் அடிக்கடி காட்டிவருவதால், இஸ்லாமிய மதத்தின் மீதும், இஸ்லாமியரைக் குறித்தும் தவறான எண்ணங்கள் மக்கள் நடுவே பரவலாக நிலவிவருவது வருந்தத்தக்கது என்று, கர்தினால் Tauran அவர்கள், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நற்செயலாற்றுவது, கருணையும், கனிவும் கொண்டிருப்பது ஆகியவை, இஸ்லாமிய பாரம்பரியத்தின் மையங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறிவருவதை, கர்தினால் Tauran அவர்கள், தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெறுப்பைத் தூண்டும் மொழியை விடுத்து, ஒருவரையொருவர் மதித்தல், உரையாடலை மேற்கொள்ளுதல் ஆகிய செயல்களை இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று, கர்தினால் Tauran அவர்களின் செய்தி அழைப்பு விடுக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.