2018-02-08 10:40:00

நற்செய்தியின் நறுமணத்தை வழங்கி வரும் திருத்தந்தை


பிப்.07,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் நறுமணத்தை, புதிதாக நமக்கு வழங்கி வருகிறார் என்று, அருள்பணி José Tolentino Mendonça அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், வத்திக்கான் அதிகாரிகளும் பிப்ரவரி 18ம் தேதி முதல் 23ம் தேதி முடிய மேற்கொள்ளவிருக்கும் ஆண்டு தியானத்தை வழிநடத்த இவ்வாண்டு பணிக்கப்பட்டிருக்கும் அருள்பணி Mendonça அவர்கள், திருத்தந்தையின் தலைமைப்பணி தூய ஆவியாரால் வழிநடத்தப்படுவதை நாம் எளிதில் உணரலாம் என்று தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு தான் வழிநடத்தும் தியானம், ‘கிறிஸ்துவின் தாகம்’ என்ற தலைப்பில் நடைபெறும் என்று கூறிய அருள்பணி Mendonça அவர்கள், உலக வாழ்வில், அன்பு, உறவு, மாண்பு என்ற பலவற்றை தேடி தாகம் கொள்ளும் மனிதர்கள், இறைவன் மீதும், அயலவர் மீதும் தாகம் கொள்ளவேண்டும் என்று தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

விவிலிய ஆசிரியராக, கவிதைகள் எழுதுபவராக பணியாற்றும் போர்த்துக்கீசிய அருள்பணியாளர், José Tolentino de Mendonça அவர்கள்,  லிஸ்பன் நகரிலுள்ள போர்த்துக்கீசிய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் உதவி அதிபராகப் பணியாற்றிவருகிறார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.