2018-02-07 15:24:00

திருத்தந்தையின் தவக்காலச் செய்தி வெளியீட்டு நிகழ்வில்...


பிப்.07,2018. கிறிஸ்தவ வாழ்வை இயக்கும் சக்திவாய்ந்த கருவி அன்பு என்பதையும், தினசரி வாழ்வில் அன்புக்கு எதிராக  எழும் தடைகளை அகற்றுவது எவ்விதம் என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தவக்காலச் செய்தியில் கூறியுள்ளார் என்று, திருப்பீட உயர் அதிகாரி  ஒருவர் கூறினார்.

பிப்ரவரி 14 வருகிற புதனன்று துவங்கவிருக்கும் தவக்காலத்திற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள தவக்காலச் செய்தியை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், பிப்ரவரி 6, இச்செவ்வாயன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டபோது இவ்வாறு கூறினார்.

இன்றைய உலகில் நாம் சந்திக்கும் போலி இறைவாக்கினர்கள் குறித்து திருத்தந்தை விடுத்துள்ள எச்சரிக்கைகளை சிறப்பாகச் சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன் அவர்கள், தவக்காலத்தில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் செபம், உண்ணாநோன்பு மற்றும் தர்மச் செயல்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார் என்று எடுத்துரைத்தார்.

மனிதர்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள், போர்களால் மட்டும் உருவாவதில்லை, எங்கெல்லாம் மனித மாண்பு அழிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வன்முறைகள் தொடர்கின்றன என்பதை திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளதை, கர்தினால் டர்க்சன் அவர்கள் குறிப்பிட்டார்.

புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் பிரதிநிதியாக இக்கூட்டத்தில் பங்கேற்ற அருள்பணி Krzysztof Marcjanowicz அவர்கள், "ஆண்டவருக்காக 24 மணி நேரங்கள்" என்ற முயற்சி, உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தவக்காலத்தில் நிகழ்ந்துவருவதைக் குறித்து பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.