2018-02-07 15:07:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 11


பிப்.07,2018. கி.பி.771ம் ஆண்டில் பிறந்த உரோமைப் பேரரசர் 6ம் கான்ஸ்டன்டைன், 780ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி முதல், 797ம் ஆண்டு ஆகஸ்ட் வரை, ஆட்சி செய்தார். இவர், உரோமைப் பேரரசர் 4ம் லியோ, பேரரசி ஐரின் தம்பதியரின் ஒரே மகன். இவர், 776ம் ஆண்டில், இணைப் பேரரசராக, தன் தந்தையால் முடிசூட்டப்பட்டார். இவரது தந்தை இளவயதில் காலமானதைத் தொடர்ந்து, பேரரசர் 6ம் கான்ஸ்டன்டைன் தனது ஒன்பதாவது வயதில், உரோமைப் பேரரசராக அரியணை ஏறினார். இவரின் வயது காரணமாக, பேரரசின் பணிகளை, இவரது தாய் பேரரசி ஐரினும், ஐரினின் முதன்மை அமைச்சர் Staurakios ஆகிய இருவரும் கவனித்துக்கொண்டனர். பேரரசர் லியோ கி.பி 726ம் ஆண்டில் திருவுருவ வணக்கம் கூடாது என்று கட்டளை பிறப்பித்திருந்தார். இதனால், இந்த வணக்கம் தொடர்பாக, கிறிஸ்தவத்தில் ஒற்றுமை குலைந்திருந்தது. பேரரசர் லியோ காலமானதைத் தொடர்ந்து, இதற்கு ஒரு தீர்வு கண்டு, காலங்காலமாய் திருஅவையில் வழக்கத்தில் இருக்கும் திருவுருவ வணக்கத்தை மீண்டும் கொண்டுவரவும், திருஅவையில் ஒற்றுமையை உருவாக்கவும், ஒரு பொதுச்சங்கத்தைக் கூட்டுவதற்கு பேரரசி ஐரின் விரும்பினார். இதனால் இவரும், இவரது மகனான பேரரசர் 6ம் கான்ஸ்டன்டைனும், உரோம் திருத்தந்தை முதலாம் Hadrian (772-795) அவர்களுக்கு கடிதம் அனுப்பினர். கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தை தராசியுஸ் அவர்களும், இது தொடர்பாக, உரோம் திருத்தந்தைக்கும், மூன்று கீழை முதுபெரும் தந்தையர்க்கும் கடிதம் அனுப்பினார். திருத்தந்தை முதலாம் Hadrian அவர்களும், பொதுச்சங்கத்திற்கு அனுமதியளித்து தனது பிரதிநிதிகளை அனுப்பினார்.

பேரரசரின் அதிகாரப்பூர்வ ஆணையின்படி, கி.பி.786ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியன்று, பேரரசர் 6ம் கான்ஸ்டன்டைன், பேரரசி ஐரின் ஆகிய இருவரின் தலைமையில், கான்ஸ்தாந்திநோபிள் நகரின் திருத்தூதர்கள் ஆலயத்தில் பொதுச்சங்கம் கூடியது. ஆனால், திருவுருவ வணக்க எதிரிகளின் படைகள், இந்த ஆலயத்தில் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டு இப்பொதுச்சங்கத்தைச் சீர்குலைத்தனர்.  அமைச்சர் Staurakios தலைமையில் படைகள் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. அத்துடன், எதிரிப் படையினரின் அமைப்பு கலைக்கப்பட்டு, அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, அவர்கள் தலைநகரைவிட்டு வெளியேற்றப்பட்டனர். பின்னர், கி.பி.787ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியன்று, நீசேயா நகரில், அதாவது தற்போதைய துருக்கி நாட்டின் İznik நகரில், Hagia Sophia ஆலயத்தில், மீண்டும் பொதுச்சங்கம் கூடியது. திருத்தந்தையின் பிரதிநிதிகள், சிசிலியிலிருந்து அழைக்கப்பட்டனர். 308 ஆயர்கள் அல்லது அவர்கள் பிரதிநிதிகள் என, ஏறத்தாழ 350 பேர் கலந்துகொண்ட இப்பொதுச்சங்கத்திற்கு முதுபெரும் தந்தை தராசியுஸ் அவர்கள் தலைமை தாங்கினார். நீசேயா நகரில் ஏழு அமர்வுகள் நடைபெற்றன.

முதல் அமர்வில்(செப்.24,787), Ancyra ஆயர் Basilius, Myra ஆயர் Theodore, Amorium ஆயர் Theodosius ஆகிய மூவரும், திருவுருவ வணக்கத் தப்பறைக் கோட்பாட்டுக்காக மன்னிப்பு கேட்டனர். இரண்டாவது அமர்வில் (செப்.26, 787) திருவுருவ வணக்கத்தை ஆதரிக்குமாறு திருத்தந்தை முதலாம் Hadrian அவர்கள் விண்ணப்பித்திருந்த கடிதங்கள் வாசிக்கப்பட்டன. உடனே இதில் கலந்துகொண்டவர்களில் ஏறத்தாழ 305 ஆயர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறினர். திருவுருவ வணக்கத்திற்கு எதிராக சபதமிட்டு, இப்பொதுச்சங்கத்தில் கலந்துகொள்ளாத ஆயர்கள், மூன்றாவது அமர்வில் (செப்.28,787) ஏற்றுக்கொள்ளப்பட்டனர். திருவுருவ வணக்கம் குறித்த விவிலியப் பகுதிகள் நான்காவது அமர்வில் (அக்.01,787) வாசிக்கப்பட்டன. வி.ப.25:19.; எண்ணிக்கை7:89; எபி.9:5.; எசே.41:18, தொ.நூ.31:34 ஆகிய பகுபதிகளும், குறிப்பாக, திருஅவைத் தந்தையரின் கடிதங்களும் வாசிக்கப்பட்டன. ஐந்தாவது அமர்வில், (அக்.04,787), இந்த தப்பறைக் கோட்பாடு, யூதர், Saracen, Manichean ஆகியோரிடமிருந்து முதலில் பரப்பப்பட்டது எனக் கூறப்பட்டது. ஆறாவது அமர்வில் (அக்.06,787), இந்த தப்பறைக் கோட்பாட்டுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஏழாவது அமர்வில்  (அக்.13,787), திருவுருவங்கள், படங்கள் ஆகியவற்றுக்கு மேலான மரியாதை செலுத்துவது தொடர்பான விசுவாச அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தப் பொதுச்சங்கம் இதோடு முடிந்துவிடவில்லை. புனிதர்களின் பரிந்துரைக்கு விண்ணப்பித்து செபிப்பது குறித்த விவாதமும் இடம்பெற்றது.

கிறிஸ்தவ சமய உண்மைகளையும், புனிதர்களையும், ஓவியம், சிலை, படிம உருவம் ஆகிய ஊடகங்களில் சித்தரித்து மக்கள் வணக்கம் செலுத்துவது தவறல்ல எனவும், கடவுளுக்கு மட்டுமே முழுமுதல் ஆராதனை செலுத்தப்படுகிறது, திருவுருவங்களுக்கு ஆராதனை செலுத்தப்படுவதில்லை எனவும் இரண்டாம் நீசேயா பொதுச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானத்தில், 787ம் ஆண்டில், பேரரசர் 6ம் கான்ஸ்டன்டைன் கையெழுத்திட்டார். அப்போது அவருக்கு வயது 16. இவர், இக்கோட்பாட்டை எதிர்த்தவர்கள் மீது பரிவு காட்டுவதுபோல் தெரிந்ததால், பேரரசி ஐரின், இத்தீர்மானத்தை செயல்படுத்தும் அதிகாரத்தை தன் மகனுக்கு அளிக்கவில்லை. 2வது நீசேயா பொதுச்சங்கம், கீழை ஆர்த்தடாக்ஸ் திருஅவை மற்றும் உரோம் கத்தோலிக்கத் திருஅவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.