2018-02-05 15:54:00

உலக அமைதிக்காக ஒரு செப நாள் பிப்ரவரி 23


பிப்.05,2018. உலகின் அமைதிக்காகச் செபிக்குமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எல்லாரையும் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் கடுமையான ஆயுத மோதல்கள் அதிகரித்துக்கொண்டே வரும் இன்றையச் சூழலில், பிப்ரவரி 23, தவக்கால முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமையை, உலகின் அனைத்துக் கிறிஸ்தவரும், அமைதிக்கான செபம் மற்றும் நோன்பு நாளாகக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளை, சிறப்பாக, காங்கோ சனநாயக குடியரசு மற்றும் தென் சூடான் நாடுகளின் மக்களுக்காக அர்ப்பணிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்தவர் அல்லாதவர்களும், இதே கருத்துக்காக இந்நாளை அர்ப்பணிக்க அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பாவி மக்கள் வேதனையிலும், துயரத்திலும் எழுப்பும் அழுகுரலை, நம் இறைத்தந்தை எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கின்றார் என்பதை மனதில்கொண்டு, நாமும் இந்த அழுகுரலைக் கேட்போம் என விண்ணப்பித்தார்.

அமைதிக்காக நான் என்ன செய்யமுடியும்? என்று, இறைவன் முன்னிலையில், நம் மனசாட்சியிடம், கேள்வி கேட்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறை வழியாக அடையும் வெற்றிகள் போலியானவைகளே. அதேவேளை, அமைதிக்காக உழைப்பது, எல்லாருக்கும் நன்மை பயக்கும், என்பதையும் வலியுறுத்தினார்.

காங்கோ சனநாயக குடியரசில் இடம்பெறும் சண்டையில், குறைந்தது 40 இலட்சம் பேரும்,  தென் சூடானில் 20 இலட்சம் பேரும் புலம்பெயர்ந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.