2018-02-05 14:57:00

இமயமாகும் இளமை : சுற்றுப்புற தூய்மை இளையோர்


மாணவி பூஜா, திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால், பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர். ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் பதினான்கு வயது நிரம்பிய மாணவி பூஜா, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, மாலை நேரங்களில் இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார். இவருக்கு, சுற்றுப்புற துாய்மை மீது ஆர்வம் அதிகம். எனவே, சுற்றுப்புற துாய்மையை செயல்படுத்தும் விதம் குறித்து, பல்வேறு புத்தகங்களைப் படித்து, ஆய்வுசெய்து கட்டுரை ஒன்றைத் தயாரித்தார். அது குறித்து விளக்கிக் கூறுவதற்காக, நேரம் ஒதுக்கித் தருமாறு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, கடந்த சனவரி 31ம் தேதியன்று கடிதம் எழுதினார் பூஜா. அக்கடிதத்தைப் பெற்ற ஆட்சியர் கந்தசாமி அவர்கள், பிப்ரவரி 03, கடந்த சனிக்கிழமையன்று, மாணவி பூஜாவை வரவழைத்து, ஒருமணி நேரம் அவருடன் கலந்துரையாடி, சுற்றுப்புற துாய்மை குறித்த அவரின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். இளம் மாணவி பூஜா கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த ஆட்சியர், தனது இருக்கையில், மாணவி பூஜாவை அமரவைத்து கவுரவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளத்தை சேர்ந்த இளம் பட்டதாரி தஹ்மிதா பானு அவர்கள், பேருந்து நிலையங்களைத் தூய்மையாக வைத்திருக்கவும் பயணச்சீட்டுகளை பேருந்துக்குள்ளேயே எறிந்து குப்பையாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயண சீட்டுகளைச் சேகரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவர், ஒரே வழித்தடத்தில்மட்டும் வழங்கப்பட்ட, ஆயிரம் பேருந்து  பயணச்சீட்டுகளைச் சேகரித்துள்ளார். தனது இந்த விழிப்புணர்வு முயற்சிக்கு, தனது உயிர்த்தோழி, மண்டபத்தை சேர்ந்த ஆ.கலைவாணி அவர்கள், எப்பொழுதும் உறுதுணையாக இருக்கிறார் என்று சொல்லியுள்ளார், தஹ்மிதா பானு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.