2018-02-05 09:28:00

அநீத வட்டி, வாழ்வைக் கொலைசெய்து மாண்பை நசுக்குகின்றது


பிப்.03,2018. மனிதரை, மனிதர்களாக நோக்காமல், உற்பத்தி செய்யும் கருவிகளாகப் பார்க்கின்ற பொருளாதார அமைப்புகளுக்கு முடிவுகட்டி, எல்லாரையும் உள்ளடக்கும் ஒரு புதிய மனிதாபிமானம் மிக்க பொருளாதாரத்திற்கு, ஒன்றுசேர்ந்து அழைப்பு விடுப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் இத்தாலிய குழுவிடம் கூறினார்.

அநியாய வட்டி மற்றும் கடன் தொல்லையால் துன்புறுவோர்க்கு உதவும், இத்தாலிய கத்தோலிக்க அரசு-சாரா ஆலோசனை அமைப்பின் ஏறத்தாழ முன்னூறு உறுப்பினர்களை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய   திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அமைப்பினர், கடந்த 26 ஆண்டுகளில், 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களை, அநீத வட்டி மற்றும் கடன்களிலிருந்து மீட்டுள்ளதைப் பாராட்டினார்.

அநியாய வட்டி மற்றும் கடன் பிரச்சனைகளால் துன்புற்ற குடும்பங்களுக்கு, அவர்களின் வீடுகளை மீட்டுக்கொடுத்தது, சிலநேரங்களில் சிறிய தொழிற்சாலைகளுக்கு உதவியது போன்ற, இந்த அமைப்பினரின் பணிகளைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, தேவையில் இருப்போருக்கு உதவி செய்வதை, மக்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அநியாய வட்டி, கடுமையான பாவம் என்றும், இது மனித வாழ்வைக் கொலைசெய்து, மனிதரின் மாண்பை நசுக்குகின்றது என்றும், ஊழலுக்கும், பொதுநலனைச் சுரண்டுவதற்கும் இது உதவிசெய்து, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அமைப்புகளைப் பலவீனப்படுத்துகின்றது என்றும், திருத்தந்தை கூறினார்.

இந்த அமைப்பினரின் பணி கடினமானது என்பதை அறிந்துள்ளவேளை, நம் ஆண்டவர் இந்த அமைப்பினருக்கு உதவி செய்கின்றார் என்றுரைத்த திருத்தந்தை, இயேசு மீது கண்களையும் இதயங்களையும் பதித்துச் செயல்படும்போது, அநியாய வட்டி மற்றும் கடன்களால் துன்புறும் மக்களுக்கு, நம்பிக்கையை ஊட்ட முடியும் என்றும் கூறினார்.

அநியாய வட்டி மற்றும் கடன் முறைகளைத் தடுப்பதற்கு, பொருளாதார மற்றும் நிதித்துறைகளில் பொறுப்பானவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுமாறும் பரிந்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அமைப்பினரின் பணிக்கு வாழ்த்தும் ஆசீரும் அளித்ததுடன், தனக்காகச் செபிப்பதற்கு மறக்க வேண்டாமெனவும்   கேட்டுக்கொண்டார்.

இத்தாலிய ஆயர் பேரவையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, 1992ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, இந்த அமைப்பின் முதல் கிளை, நேப்பிள்ஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 2ம் ஜான் பால் என்ற பெயரில் இயங்கும் இந்த அமைப்பு, தற்போது இத்தாலி எங்கும் 28 கிளைகளாக இயங்கி வருகின்றது. இவற்றில் நூறு மையங்களில், ஏறத்தாழ ஆயிரம் தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.