2018-02-03 13:52:00

இமயமாகும் இளமை: போர்க்களத்தில் பூத்த பாசமலர்


வியட்நாம் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த நேரம்... சிறு கிராமம் ஒன்றில் போராளிகள் பதுங்கியுள்ளனர் என்று கேள்விப்பட்ட சில அமெரிக்க இராணுவ வீரர்கள், அந்த கிராமத்தில், ஒவ்வொரு வீடாகச் சென்று, அங்கிருந்தோரை விரட்டியடித்து, ஒவ்வொரு வீட்டையும் குண்டுவைத்து தகர்த்தனர்.

அவ்வீரர்கள் கிராமத்தைவிட்டு வெளியேறிய வேளையில், போராளிகளால் சூழப்பட்டு, தாக்கப்பட்டனர். வீரர்களில் ஒருவர் அடிபட்டு, கீழே விழுந்தார். அவருக்குச் சுயநினைவு திரும்பியபோது, ஓர் இளம் வியட்நாம் பெண், அவருடைய காயங்களைக் கழுவிக்கொண்டிருந்ததைக் கண்டார். அவ்விளம் பெண்ணை, அவ்வீரர், கிராமத்திலிருந்து விரட்டியடித்ததை நினைவுகூர்ந்தார்.

அவர் மீண்டும் நினைவை இழந்து கொண்டிருந்தபோது, தான் எதிரிகளிடம் பிடிபட்டுவிட்டோம், இனி பிழைக்கப்போவதில்லை என்ற எண்ணத்துடன் கண்களை மூடினார். ஒரு மணி நேரம் சென்று, அவர் மீண்டும் கண்களைத் திறந்தபோது, அவ்விளம்பெண் அவரது காயங்கள் அனைத்திற்கும் கட்டுப்போட்டிருந்ததைக் கண்டார். அந்த வீரர் குடிப்பதற்கு சூடாக தேநீர் தந்தார். அவர் அதை பருகிக்கொண்டிருந்தபோது, வீரர்களைத் தேடிக்கொண்டிருந்த அமெரிக்க ஹெலிகாப்டர் தரையிறங்கியது.

அந்த இளம்பெண், எழுந்து, அமைதியாக அவ்விடத்தைவிட்டு அகன்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.