2018-02-02 15:01:00

இமயமாகும் இளமை.....: விவசாய பணிக்கு அழைக்கும் கல்லல் இளையோர்


புவி வெப்பமயமாதல், வெள்ளம், வறட்சி ஆகியவை விவசாயத்தை கேள்விக்குறியாக்கி வரும் இன்றைய நிலையில், சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்த இளைஞர் சமுதாயம், மீண்டும் மக்கள் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு, கால்வாய்களை சொந்தச் செலவில் சீரமைத்து வருகின்றனர். வறட்சியாலும், கால்வாய் சீரமைப்பு இல்லாததாலும், 500 ஏக்கர் என்ற அளவில் இருந்த விவசாய நிலங்கள், 10 ஏக்கராக சுருங்கி விட்டது. ஊரை விட்டு சென்றவர்கள் மீண்டும் விவசாயத்தில் ஈடுபடவேண்டும், என்ற அடிப்படையில் கல்லலை சேர்ந்த இளைஞர்களால் உருவாக்கப்பட்டது தான் சோலைவனம் இளைஞர் அணி.

தமிழகம் மட்டுமன்றி வெளியூர்களில் வசிக்கும் கல்லல் இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் இதில் உறுப்பினராக சேர்ந்தனர். இவர்களின் நன்கொடையால், தற்போது, கல்லல் பகுதியில் உள்ள கால்வாய்கள் அனைத்தையும் சோலைவனம் இளைஞர் அணியினர் துார்வாரி, சுத்தம் செய்து வருகின்றனர். இதன் நோக்கம், ஊரை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட ஊருக்குத் திரும்பவேண்டும், வருங்காலத்தில் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பது தான். அடுத்ததாக, ஊரை சுற்றிலும் மரக்கன்றுகளை நடுதல், பால்பண்ணை வைத்து, ஊரில் வேலை வாய்ப்பு கொடுத்தல் என்பன இவர்களின் நோக்கம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.