2018-02-01 14:04:00

பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் இந்தியத் தலத்திருஅவை


பிப்.01,2018. ஆண்களைவிட பெண்கள் குறைவாக மதிப்பிடப்படும் இந்திய சமுதாயத்தின் எண்ணங்களை மாற்றவும், பெண்களின் உரிமைகளுக்காகப் போராடவும் இந்தியத் தலத்திருஅவை உறுதுணையாக உள்ளது என்று, இந்திய ஆயர் பேரவையின் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தியாவில் பெண்கள் நிலை குறித்து, இந்திய பொருளாதாரத் துறை அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையைக் குறித்து, இந்திய ஆயர் பேரவையின் மகளிர் பணிக்குழுவின் தலைவர், ஆயர் ஜேக்கப் மார் பார்னபாஸ் அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

இந்தியாவில் பெரும்பான்மையாகப் பரவியுள்ள ஆணாதிக்கச் சிந்தனைகளை மாற்றுவது, கடினமான ஒரு பணி என்றாலும், ஆணுக்குப் பெண் நிகரானவர் என்ற கருத்தை சமுதாயத்தில் ஆழமாகப் பதிக்கவேண்டும் என்று ஆயர் பார்னபாஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்தியாவில் நிலவும் வரதட்சணைக் கொடுமைகள், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை, சாதியப் பாகுபாடுகள் என்ற பல நிலைகளில் பெண்கள் சந்திக்கும் அநீதிகளைத் தீர்க்க இந்திய ஆயர் பேரவை முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது என்று ஆயர் பார்னபாஸ் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.