2018-01-31 14:46:00

மறைக்கல்வியுரை: வார்த்தை வழிபாட்டில் வாழ்வுக்கான ஊட்டச்சத்து


சன.31,2018. இத்தாலியின் தற்போதைய குளிர்காலத்தில், ஒரு வாரமாக இருந்த மிதமான வெப்பம் மாறி, கடந்த இரண்டு நாட்களாக குளிர் சிறிது அதிகரித்து வந்தாலும், மக்கள் கூட்டத்தை மனதில் கொண்டு, திருத்தந்தையின் இவ்வார புதன் மறைக்கல்வி உரை, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலேயே இடம் பெற்றது.

‘பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்’, என எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் முதல் வரிகள் வாசிக்கப்பட, தன் உரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே!, திருப்பலி குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, வார்த்தை வழிபாட்டின் முக்கியத்துவம் குறித்து சிந்திப்போம். இங்கு கடவுள் நம்மோடு பேசுகிறார். புனித நூல்களுக்கு தூண்டுதலாக இருந்த அதே தூய ஆவியார், இந்த வார்த்தை வழிபாடுகளின்போதும், நம் மனங்களையும் இதயங்களையும், உயிருள்ள இந்த வார்த்தைகளை நோக்கித் திறக்கிறார். இறைவார்த்தையின் இந்த மேடையில், கிறிஸ்துவைக் குறித்த மறையுண்மையை அறிவித்து, நம் பதிலுரையை எதிர்நோக்கும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு நூல்களின் வாசகங்களுக்கு நாம் செவிமடுக்கும்போது, நம் வாழ்வுக்கான ஊட்டச்சத்தைப் பெறுகின்றோம். திருப்பலி வாசகங்களின் வளங்களை தன்னுள்ளே கொண்டுள்ள, வார்த்தை வழிபாடு, திருஅவை சமூகத்தில் எதிரொலித்து, கடவுளின் மக்களாகிய திருஅவையுடன் தொடர் உரையாடலில் ஈடுபடும்வேளையில், கடவுளின் மீட்பு செய்திக்கு அமைதியான முறையில் நம்மைத் திறக்குமாறு வாரத்தை வழிபாடு அழைப்பு விடுக்கின்றது. 'நாம் வாழ்வது அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையாலும்' என்ற வகையில், நாம் தனிப்பட்ட முறையிலும், திருஅவை என்ற முறையிலும்,  இறைவார்த்தைக்கு எப்போதும் திறந்தவர்களாக, அது முன்வைக்கும் சவால்களை ஏற்பவர்களாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. நம் இதயங்களில் விதைக்கப்பட்டுள்ள இறைவார்த்தை எனும் விதை, நம்முடைய இந்த உலக திருப்பயணத்தில், அபரிவிதமான கனிகளை வழங்கி, நம்மை ஒவ்வொரு நாளும், நம் ஒவ்வொரு அடியிலும் வழிநடத்திட, தூய ஆவியாரின் அருளை வேண்டுவோம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.