2018-01-31 15:30:00

மகாத்மா காந்தி மரணம் 70ம் ஆண்டு - இத்தாலிய காரித்தாஸ்


சன.31,2018. "தூக்கியெறியும் கலாச்சாரத்தின்" விளைவாக, தவறான பொருளாதாரக் கொள்கைகளும், வன்முறைகளும் வளர்ந்து வருகின்றன என்று, இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மகாத்மா காந்தி அவர்கள் கொலையுண்ட 70ம் ஆண்டு நிறைவு, சனவரி 31, இப்புதனன்று கடைபிடிக்கப்படும் வேளையில், "மறுக்கப்பட்டுள்ள உணவு" என்ற தலைப்பில், இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

"தூக்கியெறியும் கலாச்சாரத்தின்" பக்க விளைவாக, பெரும்பான்மை மக்களுக்குச் சென்று சேர வேண்டிய உணவு மறுக்கப்படுகிறது என்று கூறும் இவ்வறிக்கை, 2016ம் ஆண்டு, உணவு பற்றாக்குறையால் வாடிய மக்களின் எண்ணிக்கை 81 கோடியே 50 இலட்சம் என்றும், இந்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டைவிட, 3 கோடியே 80 இலட்சம் கூடுதல் என்றும் கூறியுள்ளது.

உணவு மறுக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பான்மையானோர் ஆப்ரிக்க கண்டத்தில் வாழ்வோர் என்றும், மனிதர்களுக்கு வழங்கப்படவேண்டிய அடிப்படை மதிப்பு குறைவதே பல்வேறு பிரச்சனைகளின் ஆணிவேர் என்றும், இத்தாலிய காரித்தாஸ் அமைப்பின் அறிக்கை கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.