2018-01-31 15:00:00

சிறுபான்மையினர் துணிவை பாராட்டிய கர்தினால் சாந்திரி


சன.31,2018. சமய உரிமையைப் பாதுகாக்க, அர்ப்பண உணர்வோடு, தேசிய அளவிலும், உலக அளவிலும் உழைத்துவரும் அனைவருக்கும் நன்றி கூறுவதாக, கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்திரி அவர்கள் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கூறினார்.

மதங்களிடையே சகிப்புத்தன்மை குறைந்து வருவதை மையப்படுத்தி, சனவரி 30, இச்செவ்வாய் மாலை, உரோம் நகரின் கிரிகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் துவக்க உரை வழங்கிய கர்தினால் சாந்திரி அவர்கள், மத உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழலில், ஒவ்வொரு நாளும், விசுவாசத்துடன் வாழ்ந்துவரும் சிறுபான்மையினரின் துணிவை பாராட்டினார்.

ஆசியாவிலும், குறிப்பாக மத்தியக் கிழக்குப் பகுதிகளிலும் ஏனைய மதத்தினர், திருத்தந்தையருக்கும், தனக்கும் வழங்கிய வரவேற்பை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் சாந்திரி அவர்கள், அண்மைய ஆண்டுகளில் மத உரிமை மிக அதிகமாகப் பறிக்கப்பட்டுள்ள ஓர் அடிப்படை உரிமை என்பதையும் எடுத்துரைத்தார்.

மத உரிமையைப் பாதுகாக்க தங்கள் உயிரை வழங்கிய சாட்சிகள், பழிக்குப் பழி என்ற உணர்வில் அல்ல, மாறாக, விசுவாசம், மன்னிப்பு என்ற உணர்வுகளில் நம்மை வழிநடத்துகின்றனர் என்பதை, கர்தினால் சாந்திரி அவர்கள் சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.

ஒவ்வொரு மனிதருக்கும் மத உரிமை அடிப்படை உரிமை என்பதை உணர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று, இரண்டாம் வத்திக்கான் சங்கம் வலியுறுத்தியதை கர்தினால் சாந்திரி அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.