2018-01-31 14:55:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 10


சன.31,2018. திருஅவையின் தொடக்க காலத்தில் நடைபெற்ற முதல் எட்டுப் பொதுச்சங்கங்களும் (கி.பி.325-870), கீழை உரோமைப் பேரரசரின் தலைநகராகிய விளங்கிய கான்ஸ்தாந்திநோபிள், அதாவது தற்போதைய துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரிலும், அதையடுத்த நகரங்களிலும் நிகழ்ந்தன. இச்சங்கங்கள், உரோமைப் பேரரசர்களால் கூட்டப்பட்டன. கிறிஸ்தவ விசுவாச உண்மைகளை வரையறுப்பதே இப்பொதுச்சங்கங்களின் முக்கிய நோக்கமாயிருந்தது. கிறிஸ்துவின் இறை இயல்பு, தூய ஆவியாரின் இறை இயல்பு, மரியா, கடவுளின் தாய், கிறிஸ்துவின் மனித, இறை இயல்புகள் போன்ற விசுவாச உண்மைகள், முதல் ஆறு பொதுச்சங்கங்களில் வரையறுக்கப்பட்டன. நீசேயா நகரில் கி.பி. 787ம் ஆண்டில் நடந்த பொதுச்சங்கத்தில், திருவுருவ வணக்கம் குறித்து வரையறுக்கப்பட்டது. இதற்கு ஒரு பின்னணியும் உள்ளது.

பைசான்டைன் பேரரசர் அதாவது, கீழை உரோமைப் பேரரசராகிய 5ம் கான்ஸ்ட்டைன், திருவுருவ வணக்கத்தைத் தடை செய்தார். தனது நிலைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கத்தில், கி.பி.754ம் ஆண்டில், கான்ஸ்தாந்திநோபிளுக்கு எதிரே அமைந்திருந்த Hieria மாளிகையில், பொதுச்சங்கம் ஒன்றைக் கூட்டினார் பேரரசர். இப்பொதுச்சங்கத்தில், முன்னூறுக்கும் மேற்பட்ட ஆயர்கள் கலந்துகொண்டு, பேரரசரின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். உயிருள்ள படைப்புகளை சட்டத்திற்குப் புறம்பே வரைவது, கிறிஸ்து மனித உரு எடுத்த நம் மீட்பின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு நிந்தனை செய்வதாகும்.  புனிதர்களின் வடிவில், பல வண்ணங்களில் உயிரற்ற படங்களை .யாரும் வரைந்தால், அதற்கு மதிப்பு கிடையாது, அது சாத்தானின் தூண்டுதலால் செய்யப்படுவது  என்று ஆயர்கள் அறிக்கை வெளியிட்டனர். Hieria பொதுச் சங்கத்தை ஏழாவது பொதுச்சங்கம் எனவும் அறிக்கையிட்டனர். இதேபோன்று, கி.பி.325ம் ஆண்டில், Elvira பொதுச் சங்க்த்திலும், திருவுருவப் படங்கள் குறித்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. ஆலயங்களில் திருப்படங்கள் வைக்கப்படக் கூடாது என்று கூறப்பட்டது. எனவே, Hieria பொதுச்சங்கத் தீர்மானத்தை எதிர்த்த ஆயர்கள், இதை கேலிக்கூத்தாக நோக்கினர். ஏனென்றால், இப்பொதுச்சங்கத்தில், முக்கியமான ஐந்து முதுபெரும் தந்தையர் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்பட்டது. கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தை ஆட்சிப்பீடம் காலியாக இருந்தது. அந்தியோக்கியா, எருசலேம், அலெக்சாந்திரியா ஆகிய பகுதிகள், இஸ்லாம் ஆட்சியாளர்களின் பிடியில் இருந்தன. உரோம் திருத்தந்தை அதில் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை. ஆதலால், Hieria பொதுச்சங்கத் தீர்மானங்கள், இரண்டாவது நீசேயா பொதுச்சங்கத்திற்கு முன்னரே, கி.பி.769ம் ஆண்டில் நடந்த இலாத்தரன் பொதுச்சங்கத்தில் பழித்துரைக்கப்பட்டன. பின்னர், Hieria பொதுச்சங்கத் தீர்மானங்கள், இரண்டாவது நீசேயா பொதுச்சங்கத்திலும் புறக்கணிக்கப்பட்டன.

பேரரசர் 5ம் கான்ஸ்ட்டைன் தீவிரமாக அமல்படுத்திய திருவுருவ வணக்கத் தடை நடவடிக்கையில், திருவுருவப்படங்களுக்கு வணக்கம் செலுத்தியவர்களும், கடும்துறவு வாழ்ந்தவர்களும் துன்புறுத்தப்பட்டனர். அதேநேரம், பேரரசரின் உருவங்களுக்கு வணக்கம் செலுத்துவதும் அனுமதிக்கப்பட்டது. இந்தச் செயல், புனிதர்கள் மற்றும், ஆயர்களைவிட, பேரரசரின் அதிகாரத்தை விரிவுபடுத்துவதாக, எதிர்ப்பாளர்கள் சிலர் கருதினர். பேரரசர் 5ம் கான்ஸ்ட்டைனின் திருவுருவ வணக்கத் தடை கொள்கையை, அவரின் மகன் 4ம் லியோவும் ஆதரித்தார். லியோ இளவயதிலே காலமானதைத் தொடர்ந்து, அவரின் மனைவியான, பேரரசி ஏத்தென்சின் ஐரின் இவ்விவகாரத்திற்கு ஒரு தீர்வு காண முனைந்தார். இத்தடை விவகாரம் கிறிஸ்தவத்தில், ஒற்றுமையைப் பாதித்திருந்தது. கி.பி.784ம் ஆண்டில் கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தை 4ம் பவுல் அவர்களுக்குப் பதிலாக, பேரரசரின் செயலராகப் பணியாற்றிவந்த, முதுபெரும் தந்தை தராசியுஸ் அவர்கள் நியமிக்கப்பட்டார். ஏனைய திருஅவைகளோடு ஒன்றிப்பை ஏற்படுத்த வேண்டும்,  அதாவது திருவுருவ வணக்கங்கள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், முதுபெரும் தந்தை தார்சியுஸ் அவர்கள் நியமிக்கப்பட்டார். ஆதலால், மற்றுமொரு பொதுச்சங்கத்தைக் கூட்ட வேண்டுமென்ற அவசியம் ஏற்பட்டது.   

அச்சமயத்தில் உரோமைப் பேரரசராக அரியணையில் இருந்த 6ம் கான்ஸ்ட்டைன் சிறுவனாக இருந்ததால், அவரின் பிரதிநிதியாக, அவரின் தாய் பேரரசி ஐரின், பேரரசின் பணிகளைக் கவனித்து வந்தார். இப்பொதுச்சங்கம் கூட்டுவது குறித்து பேரரசர் 6ம் கான்ஸ்ட்டைனும், பேரரசி ஐரினும், அப்போதைய உரோம் திருத்தந்தை முதலாம் Hadrian (772-795) அவர்களுக்கு கடிதம் அனுப்பினர். இப்பொதுச்சங்கத்தில் திருத்தந்தை கலந்துகொள்ள வேண்டும், அல்லது அவர் தன் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் எனக் கேட்டிருந்தனர். முதுபெரும் தந்தை தராசியுஸ் அவர்களும், இது தொடர்பாக, உரோம் திருத்தந்தைக்கும், மூன்று கீழை முதுபெரும் தந்தையர்க்கும் கடிதம் அனுப்பினார். திருத்தந்தையும், பொதுச்சங்கம் கூட்டப்படுவதற்கு, பல்வேறு நிபந்தனைகளை வைத்து, அனுமதியளித்தார். தனது பிரதிநிதிகளாக, உரோம் நகரின் புனித சாபாஸ் கிரேக்க துறவு ஆதீனத்தின் தலைவர் பீட்டர், பேராயர் பீட்டர் ஆகிய இருவரையும் அவர்களை அனுப்பினார் திருத்தந்தை முதலாம் Hadrian.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.