2018-01-31 15:49:00

சர்வாதிகார போக்கை எதிர்க்கும் பிலிப்பின்ஸ் ஆயர்கள்


சன.31,2018. பிலிப்பின்ஸ் அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்கள், நாட்டின் சட்டங்களில் உருவாக்க விழையும் மாற்றங்கள் குறித்து, கத்தோலிக்க மக்கள் விழிப்பாயிருக்கவேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சனவரி 27 முதல் 29 முடிய நடைபெற்ற பிலிப்பின்ஸ் ஆயர்கள் பேரவையின் 116வது கூட்டத்தில், நாட்டின் சட்டங்களில், அரசுத்தலைவர் கொணரவிழையும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதென்றும், ஆயர்களின் சந்திப்பிற்குப் பின், கத்தோலிக்க மக்களுக்கு மடல் ஒன்றை ஆயர்கள் அனுப்பியுள்ளனர் என்றும் ஆசிய செய்தி கூறியுள்ளது.

1987ம் ஆண்டு பிலிப்பின்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்ட சட்டங்களில் மாற்றங்களைக் கொணர விழைவதாக அரசுத்தலைவர் அறிவித்திருப்பதும், மாற்றங்கள் கொணர்வதில் வெளிப்படையான வழிமுறைகள் இல்லாதிருப்பதும், சர்வாதிகார போக்கை நினைவுறுத்துகிறது என்று ஆயர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தேர்தல்கள் வேண்டாம் என்றும், அரசுத் தலைவர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கூறப்படும் கருத்துக்கள், மக்கள் நலனை மனதில் கொண்டு செய்யப்படும் மாற்றங்கள் அல்ல என்பதை, இம்மடலில், ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.