2018-01-31 15:37:00

குடியரசுகளை நிலையற்றதாக செய்யும் போக்குகள்


சன.31,2018. எப்படியும் வாழலாம் என்ற கருத்தியலின் தாக்கத்தால், நன்னெறி விழுமியங்களில் தெளிவில்லாமல் வாழும் வழிமுறைகள், மனித சமுதாயத்தை, குறிப்பாக, குடியரசுகளை நிலையற்றதாக செய்துவிடும் என்று, ஐரோப்பிய கர்தினால் ஒருவர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் உரை வழங்கினார்.

நியூ யார்க் நகரில் இயங்கிவரும் கொலம்பியா பல்கலைக் கழகத்தில், சனவரி 29, இத்திங்களன்று உரை வழங்கிய Esztergom-Budapest பேராயர், கர்தினால் பீட்டர் எர்டோ (Peter Erdo) அவர்கள், உலக மதங்களின் பாரம்பரிய ஞானத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டு வாழ்வது, சமுதாயங்களை நிலைகுலையச் செய்துவிடும் என்று கூறினார்.

தொன்றுதொட்டு மனிதர்களை வழிநடத்தி வந்துள்ள பல்வேறு உறுதியான சமய வழிமுறைகளை புறந்தள்ளிவிட்டு, பெரும்பான்மையினரின் கருத்துக்கள் என்ற பெயரில் தவறான கொள்கைகளை பின்பற்றுவது நம்மை ஆபத்திற்கு அழைத்துச் செல்லும் என்று கர்தினால் எர்டோ அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.

மனிதர்களுக்கும், மனித உரிமைகளுக்கும் மதிப்பு அளிக்காமல் வளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றங்கள் நன்னெறி விழுமியங்கள் ஏதுமின்றி செயல்படும்போது, மனித சமுதாயம் மேலும் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று கர்தினால் எர்டோ அவர்கள் தன் உரையில் கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.