2018-01-30 16:16:00

“Veritatis Gaudium” புதிய திருத்தூது கொள்கை விளக்கம்


சன.30,2018. திருப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தன்மை மற்றும் பாடத்திட்டங்களில் அடிப்படையான மாற்றங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“Veritatis Gaudium” அதாவது “உண்மையின் மகிழ்வு” என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று வெளியிட்டுள்ள 87 பக்க புதிய திருத்தூது கொள்கை விளக்கத்தில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

குருத்துவ கல்லூரிகள் அல்லது பாப்பிறைப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகப் பணியாற்றுவதற்குத் தேவைப்படும், திருப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டயங்களை வழங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கென இந்த கொள்கை விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

தூய ஆவியாரால் நிரப்பப்பட்ட நற்செய்தி அறிவிப்பின் ஒரு புதிய தளத்தில் கால்பதிப்பதற்கு, அனைத்து இறைமக்களும் தயாராக இருக்கவேண்டியது இக்காலத்தின் முதன்மைத் தேவையாக உள்ளது என்றும், இந்த நற்செய்தி அறிவிப்பின் புதிய தளம், தேர்ந்துதெளிதல், தூய்மைப்படுத்துதல், சீரமைப்பு ஆகிய வழிமுறைகளுக்கு அழைப்பு விடுக்கின்றது என்றும், இந்த கொள்கை விளக்கம் கூறுகிறது.

இந்த வழிமுறைகளில், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்ட அமைப்பில், பொருத்தமான புதுப்பித்தல், முக்கிய பங்காற்றுகின்றது என்றும், இந்த கொள்கை விளக்கம் கூறுகிறது

பொது விதிமுறைகள், சிறப்பு விதிமுறைகள் ஆகிய இரு பகுதிகளைக் கொண்டுள்ள, இந்த திருத்தூது கொள்கை விளக்கம், செயல்பாட்டு விதிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது. 1979ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் வெளியிட்ட, “Sapientia Christiana” திருத்தூது கொள்கை விளக்கத்தில் சொல்லப்பட்டுள்ள பல விதிமுறைகளிலும் காலத்திற்கேற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.