2018-01-30 16:14:00

ஹான்சன் நோயை ஒழிப்பதற்கு தொடர் முயற்சிகள் அவசியம்


சன.30,2018. ஹான்சன் நோய் எனப்படும் தொழுநோயை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள், தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்று, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

சனவரி 28, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட, 65வது உலக தொழுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், இக்காலத்திலும், ஒவ்வொரு இரண்டு நிமிடத்துக்கும் ஒருவர், ஹான்சன் நோய்க் கிருமியால் தாக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.

உறுதியற்ற சமூக-பொருளாதாரச் சூழல்கள் நிலவும் இடங்களில், ஹான்சன் நோய் நலவாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும், இச்சூழல்கள் இந்நோய்க் கிருமிகள் பரவுவதற்குச் சாதகமாக உள்ளன என்றும், கர்தினாலின் செய்தி கூறுகின்றது.

ஹான்சன் நோய் இல்லாத உலகையும். இந்நோயுற்றோர் ஒதுக்கப்படாத நிலையையும் அமைப்பதற்கு, அனைத்து திருஅவைகள், துறவு சபைகள், பன்னாட்டு நிறுவனங்கள், அரசுகள், அரசு-சாரா அமைப்புகள், மக்கள் கழகங்கள் போன்ற அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அச்செய்தி வலியுறுத்துகின்றது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர், ஹான்சன் நோயுற்றோருடன் தன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.