2018-01-30 15:34:00

மேய்ப்பர்கள் இயேசுவின் கனிவை வெளிப்படுத்த வேண்டும்


சன.30,2018. இறைமக்களுக்கு மேய்ப்புப்பணியாற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளவர்கள், இயேசுவின் கனிவையும், அவரின் நெருக்கத்தையும் எப்போதும் வெளிப்படுத்த வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில் மறையுரையாற்றினார்.

பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் நலம் பெற்றது, தொழுகைக்கூட தலைவரின் இறந்த மகள் மீண்டும் வாழ்வு பெற்றது ஆகிய இயேசுவின் இரு புதுமைகள் பற்றிச் சொல்லும் இந்நாளின் மாற்கு நற்செய்திப் பகுதியை (மாற்.5:21-43) நாம் சிந்திப்பதைவிட, தியானிக்க வேண்டும், ஏனெனில் இவை, மேய்ப்பர், ஆயர்கள், மற்றும் அருள்பணியாளர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலையில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை, கடற்கரையில் பெருந்திரளான மக்களால் சூழப்பட்டிருந்த இயேசு, அம்மக்கள் மீது கனிவு காட்டினார் என்று நற்செய்தியாளர் விவரிக்கின்றார் என்றார்.

இயேசு, ஆன்மீக ஆலோசனைக்கோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கோ, குறிப்பிட்ட நேரம், பணம் ஆகியவற்றை எழுதி வைத்து அலுவலகத்தைத் திறக்கவில்லை என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு மக்களோடு இருந்து, அவர்கள் மீது அக்கறை காட்டினார் என்றும், இயேசு, மேய்ப்பருக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் என்றும் கூறினார்.

பெருந்திரளாக மக்கள் வந்து இயேசுவை நெருக்கினர் என்று நற்செய்தி சொல்கிறது, இவ்வாறு மாற்கு நற்செய்தியில் ஐந்துமுறை கொடுக்கப்பட்டுள்ளது என்றும், திருத்தூதுப்பயணங்களில் மக்கள் இவ்வாறு செய்வதைக் காண முடிகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

மேய்ப்பர்கள், இயேசுவைப்போல், நன்மை செய்து சோர்ந்து போய், தங்களின் நாளை நிறைவு செய்ய வேண்டும், இவ்வாறு செய்தால், மக்கள், உயிருள்ள கடவுளின் பிரசன்னத்தை உணர்வார்கள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களோடு கனிவுடனும் நெருக்கமாகவும் இருப்பதற்கு, இத்திருப்பலியில் ஆண்டவரிடம் செபிப்போம் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.