2018-01-27 14:12:00

பொதுக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


"இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" (மாற்கு 1:27) என்று மக்கள் இயேசுவை வியந்து பேசுவது, இன்றைய சிந்தனைகளை வழிநடத்துகின்றது. 'அதிகாரம்', 'பணி' என்ற சொற்களின் பல உள்பொருள்களை, இன்றைய வாசகங்கள் பேசுகின்றன. ‘அதிகாரம்’ என்ற சொல்லைக் கேட்டதும், இன்றைய உலகை, தங்கள் அதிகாரத்தால் ஆட்டிப்படைக்கும் ஒரு சில தலைவர்களின் உருவங்கள் நம் நினைவுகளில் தோன்றியிருக்கும். இந்தத் தலைவர்கள், தலைமைப்பணி, அதிகாரம் ஆகிய சொற்களுக்கு, தவறான இலக்கணம் வகுத்துக்கொண்டிருப்பவர்கள். ஆனால், இவர்களை, நமது ஊடகங்கள், மீண்டும், மீண்டும் பேசி வருவதால், தலைமைப்பணி, அதிகாரம் என்றாலே இப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகமும், கலக்கமும் நமக்குள் உருவாகின்றன.

உலகில் இன்று 195 நாடுகள் உள்ளன. இவற்றில் அரசுத் தலைவர்களாகவும், பிரதம மந்திரிகளாகவும் பணியாற்றுவோரின் எண்ணிக்கை, ஏறத்தாழ 300 இருக்கும். இவர்களில், உலகினரின் கவனத்தை அடிக்கடி ஈர்ப்பது, ஒரு சில நாடுகளின் தலைவர்களும், பிரதமர்களும் மட்டுமே. ஊடகங்களால், மீண்டும், மீண்டும், வெளிச்சமிட்டுக் காட்டப்படும் இந்தத் தலைவர்கள், தங்கள் ஆணவத்தால், தொடர்ந்து தவறுகள் செய்வதை, ஊடகங்கள் பேசி வருகின்றன. "Power corrupts; absolute power corrupts absolutely" அதாவது, "அதிகாரம், கேடு விளைவிக்கிறது; முழுமையான அதிகாரம், கேட்டினை, முழுமையாக விளைவிக்கின்றது" என்ற ஆங்கிலக் கூற்றின் எடுத்துக்காட்டுகளாக வாழும் இத்தலைவர்களை எண்ணி, வெட்கமும், வேதனையும் அடைகிறோம்.

தலைமைப்பணிக்கு தவறான எடுத்துக்காட்டுகளாக விளங்கும் இத்தலைவர்களிலிருந்து நம் கவனத்தைத் திருப்பி, ஒரு நல்ல தலைவரைப்பற்றி சிறிது நேரம் இந்த வழிபாட்டில் சிந்திப்போம். இந்தியாவில், திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவாளர் மானிக் ஷொர்கார் (Manik Sarkar) அவர்களைப் பற்றிய விவரங்கள், நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சொந்த வீடோ, காரோ, செல்லிடப்பேசியோ இல்லாதவர் இவர். பாதுகாப்புப் படை ஏதுமின்றி மாநிலத்தில் வலம் வருபவர். வங்கிக் கணக்கில் இவரிடம் உள்ள தொகை, ரூபாய் 10,000க்கும் குறைவு.

சனவரி 26, இந்தியா, குடியரசு நாளைக் கொண்டாடியபோது, பல தலைவர்கள், தாங்கள் கனவுகாணும் இந்தியா எப்படிப்பட்டது என்று தங்கள் உரைகளில் முழங்கியிருப்பர். இந்நேரத்தில், 2017ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, இந்திய சுதந்திர நாளன்று, மானிக் ஷொர்கார் அவர்கள் தான் காணவிழையும் இந்தியாவைக் குறித்து, அழகான உரை வழங்கினார். அவர் வழங்கிய உரையிலிருந்து ஒரு சில வரிகள் இதோ:

"வேற்றுமையில் ஒற்றுமை என்பது, இந்தியாவின் பாரம்பரியக் கருவூலம். மத சார்பற்ற நிலையே, இந்தியாவை ஒன்றுபட்ட நாடாக இதுவரை இணைத்து வந்துள்ளது. ஆனால், இன்று, மதசார்பற்ற நிலை தாக்கப்பட்டு வருகிறது. மதம், சாதி, சமுதாயம் ஆகியவற்றின் பெயரால், தேசிய உணர்வு தகர்க்கப்படுகிறது. இந்த நாட்டை, ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய நாடாக மாற்றவும், பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயராலும், மக்களின் உணர்ச்சிகள், தவறான முறையில் தூண்டிவிடப்படுகின்றன. நாட்டை அழிக்கும் இந்தச் சதித்திட்டங்களுக்கு எதிராக, உண்மையான நாட்டுப்பற்று கொண்ட அனைவரும் இன்று உறுதியெடுக்க வேண்டும்" என்று திரிபுரா மாநில முதலமைச்சர் உரை வழங்கினார். அவரது உரையை, இந்திய தொலைக்காட்சியும், வானொலியும் ஒளி, ஒலிபரப்ப மறுத்துவிட்டன.

இறைவாக்கினருக்குரிய துணிவுடன், இன்றைய இந்தியாவின் உண்மை நிலையைத் தோலுரித்துக் காட்டிய மானிக் ஷொர்கார் அவர்களைப் போல், இறைவாக்கினர்களாக வாழும் பல தலைவர்கள் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காமல் பணியாற்றும் இத்தகையத் தலைவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இறைவாக்கினர் என்ற பொறுப்பை ஏற்பவர் எத்தகையவராய் இருக்கவேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்லித்தருகிறது. மறைநூல் அறிஞரைப் போலன்றி, தனிப்பட்ட ஓர் அதிகாரத்துடன் இயேசு கற்பித்தார் என்று, இன்றைய மாற்கு நற்செய்தியின் அறிமுக வரிகள் நமக்குச் சொல்கின்றன: மாற்கு நற்செய்தி 1: 21-22

இயேசுவின் போதனை மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்ல. அவர்கள் அதுவரை கேட்டிராத ஓர் அதிகாரத்துடன் அந்தப் போதனை ஒலித்தது. இயேசுவுக்கு இந்த அதிகாரம் எங்கிருந்து வந்தது? இந்தக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன், இயேசுவின் அதிகாரம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.

‘அதிகாரம்’ என்று நாம் தமிழில் பயன்படுத்தும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் 'Authority'. இந்தச் சொல்லுக்கு Oxford அகராதியில் இரு வேறுபட்ட அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் வகை அர்த்தம், நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சக்தி, பதவி, நிறுவனம் என்ற அர்த்தங்களில் ஒலிக்கின்றது. இரண்டாவது வகை அர்த்தம்தான் நாம் இன்று குறிப்பாகச் சிந்திக்க வேண்டியது. இதில், Authority என்ற வார்த்தைக்கு, ‘the power to influence others, especially because of one’s commanding manner or one’s recognized knowledge about something’ என்று அர்த்தம் தரப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது அர்த்தத்தை வார்த்தைகளால் விளக்குவதற்குப் பதில், ஒரு கற்பனைக் காட்சியின் வழியே புரிந்துகொள்ள முயல்வோம். உலகத்தலைவர்கள் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தைக் கற்பனை செய்துகொள்வோம். கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள், ஒவ்வொரு தலைவரும் நுழையும்போது, அவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும், அவர்களைச் சுற்றி மெய்காப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் என்று, பலர் வருவார்கள். அந்தத் தலைவரைப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கரவொலி எழுப்ப வேண்டியிருக்கும்.

அந்நேரம், அந்த அரங்கத்தினுள், அன்னை தெரேசா, காந்தியடிகள், நெல்சன் மண்டேலா, அப்துல் கலாம், அல்லது, மக்களின் மனங்களில் உயர்ந்த இடம் பிடித்திருக்கும் ஓர் உன்னத மனிதர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரைப்பற்றி அறிவிப்புக்கள் தேவையில்லை, அவரைச்சுற்றி பலர் நடந்து வரவும் தேவையில்லை. அவர் அங்கு நுழைந்ததும், அந்த அரங்கத்தில் உருவாகும் மரியாதை, தனிப்பட்ட வகையில் இருக்கும். அங்கிருப்போர், யாருடையத் தூண்டுதலும் இல்லாமல், எழுந்து நிற்பார்கள். கரவொலி எழுப்புவதற்குப் பதில், அவரைக் கையெடுத்து கும்பிடுவார்கள். இதுதான் உள்ளூர உருவாகும் மரியாதை. இந்த மரியாதைக்குக் காரணம், அந்த மாமனிதர், நம் உள்ளங்கள் மீது கொண்டிருக்கும் அதிகாரம். இந்த அதிகாரம்தான் 'Authority' என்ற வார்த்தைக்குத் தரப்படும் இரண்டாவது வகையான அர்த்தம்.

இந்த இரண்டாவது வகையில், மற்றோர் அம்சமும் அடங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்டத் துறையில் ஒருவர் பெற்றுள்ள ஆழமான அறிவு, அந்த அறிவின் அடிப்படையில் அதைப்பற்றிப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ, அவர் தன்னிலேயேப் பெறும் அதிகாரம்... இது, இந்த இரண்டாவது அர்த்தத்தில் பொதிந்துள்ள மற்றோர் அம்சம்.

பல ஆண்டுகள், பல்லாயிரம் சோதனைகளை மேற்கொண்டு, மின்விளக்கை உருவாக்கியவர், தாமஸ் ஆல்வா எடிசன். மின்விளக்கைப் பற்றிப் பேச, இவரைவிட, யாருக்கு ‘அதிகாரம்’ இருக்கமுடியும்? எடிசன் அவர்கள், எந்த ஒரு பள்ளியிலும் பயின்றதாகத் தெரியவில்லை. கல்வி பயிலவே அருகதையில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர், தன் சொந்த படைப்பாற்றல் கொண்டு, 1000க்கும் அதிகமான கண்டுபிடிப்புக்களை உலகறியச் செய்தார். தன் கண்டுபிடிப்புக்களைப் பற்றி பேசும் அதிகாரமும் பெற்றார்.

‘அதிகாரம்’ என்பது நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்கமுடியும், தீர்க்கமுடியும். நமது குடும்பங்களில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பேரவைகள் வரை அதிகாரம் பல வடிவங்களில் வெளிப்படுகின்றது.

போட்டியிட்டுப் பெறும் பதவிகள் வழியே, ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரம் நிரந்தமானது அல்ல. மாறாக, உன்னதமான பண்பு, அல்லது, உயர்ந்த அறிவு இவற்றைக் கொண்டு ஒருவர் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம், அவர் வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த அதிகாரத்தில், ஆணவம் இருக்காது. அடுத்தவரை அடக்கி ஆளவேண்டும் என்ற ஆவல் இருக்காது. ஒருவர், சுயமாக, தனக்குள் வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மன சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேசவைக்கும். அது, கேட்பவர்களையும் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி அவர்களை வழிநடத்தும்.

இயேசுவின் அதிகாரம் இந்த வகையைச் சேர்ந்தது. அவர் எந்த ஒரு குருவிடமோ, பள்ளியிலோ பயிலவில்லை. இறைவனைப்பற்றி தன் வாழ்வில் ஆழமாக உணர்ந்து தெளிந்தவற்றை மக்களிடம் பகிர்ந்துகொண்டார். எனவே, அவர் சொன்னவை, மக்களை வியப்பில் ஆழ்த்தின. அதுவரை, சட்ட நூல்களிலிருந்து மனப்பாடம் செய்தவற்றைச் சொல்வதுபோல் மறைநூல் வல்லுனர்கள் போதித்த பாடங்களுக்கும், இயேசு தன் சொந்த அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மைகளைச் சொன்னதற்கும் வேறுபாடுகள் அதிகம் இருந்தன. கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை, இயேசு ஆழமாக உணர்ந்ததால், அவர் இந்த அதிகாரத்துடன் போதித்தார்.

கடவுளால் அனுப்பப்படும் இறைவாக்கினர்களின் இயல்பைப்பற்றி இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்குகிறது. இறைவன் சொன்ன செய்திகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றைத் தங்களுக்கு விளக்கி, தங்களை இதுவரை வழிநடத்தி வந்த மோசே என்ற இறைவாக்கினர், இறக்கும் நிலையில் இருந்ததால் கலக்கம் அடைந்திருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல் சொல்வதாக அமைந்துள்ளன, மோசேயின் சொற்கள்: இணைச்சட்டம் 18: 15-20

மோசே துவங்கி, இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர்களாக, தலைவர்களாக பலர் இருந்தனர். அவர்களில் பலர், அரியணைகளில் அமர்ந்து அதிகாரம் செலுத்தவில்லை. பலர் பரிதாபமான நிலையில் வாழ்ந்தனர். ஆனாலும், இறைவன் பெயரால் பேசுகிறோம் என்ற அந்த அதிகாரம் ஒன்றே, அவர்களை, துணிவுடன் செயல்பட வைத்தது. இந்த இறைவாக்கினர்களின் முழு வடிவமாக, இறை வாக்காகவே வந்த இயேசு, ‘அதிகாரம்’ என்ற சொல்லுக்கு இன்னும் பல புதிய இலக்கணங்களைத் தந்தார்.

இயேசு அதிகாரத்துடன் போதித்தபோது, மூன்று வகை விளைவுகள் ஏற்பட்டன. சாதாரண மக்கள் அவரது போதனையைக் கேட்டு வியப்புற்றனர். தீய ஆவி பிடித்த ஒருவர், இயேசுவைக் கண்டதும் பயந்தார். இயேசு அந்த ஆவி மீது அதிகாரத்துடன் செயல்பட்டார். ஆவியை விரட்டினார். மற்றுமொரு விளைவு இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பின்னர், நான்கு நற்செய்திகளில், பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதுதான், மறைநூல் அறிஞர்களுக்கு ஏற்பட்ட விளைவு. அவர்கள் இயேசுவின் இந்த அதிகாரத்தைக் கண்டு பொறாமைப்பட்டனர். தங்கள் அதிகாரம் பறிபோய்விடுமோ என்று பயந்தனர். அந்தப் பயத்தை மூடி மறைத்துவிட்டு, இயேசுவின் அதிகாரத்தை மக்கள் முன் குலைக்கும் முயற்சிகளில் இறங்கினர். மீண்டும் மீண்டும் தோல்வி கண்டனர்.

நாம் வாழும் இந்நாட்களில், அதிகாரம் என்பதன் உண்மையான இலக்கணத்தை தன் சொல்லாலும், வாழ்வாலும் சொல்லித் தருபவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இவர், 2013ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு திருநாளன்று, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியை ஏற்றார். அத்திருப்பலியில் அவர் வழங்கிய மறையுரை, அதிகாரம் என்ற சொல்லுக்கு, ஆழமும் அர்த்தமும் தந்தது. தலைமைத்துவம், ஒரு பணியே அன்றி, பதவியோ, அதிகாரமோ அல்ல என்பதை தெளிவாக்கினார் திருத்தந்தை. இதோ, திருத்தந்தை ஆற்றிய மறையுரையிலிருந்து ஒரு சில எண்ணங்கள்:

பணிபுரிவதே உண்மையான அதிகாரம். இந்தப் பணியில் தன்னை முழுவதும் இணைத்து, சிலுவையில் இறுதியில் இணைவதே திருத்தந்தையின் அதிகாரம். சிறப்பாக, வறியோர், வலுவிழந்தோர், சமுதாயத்தில் எவ்வகையிலும் முக்கியத்துவம் பெறாதோர் திருத்தந்தையின் பணியில் முதலிடம் பெறவேண்டும். அன்புடன் பணிபுரிபவர்களால் மட்டுமே அகிலத்தைப் பாதுகாக்கமுடியும்.

குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம் சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும், அதிகாரம் என்பதை, சரியான கண்ணோட்டத்தில் நோக்குவதற்கு, இன்றைய வாசகங்கள் பெரிதும் உதவுகின்றன. அயலவரை அடக்கி ஆள்வதால் அல்ல, மாறாக, நமக்குள் நாமே வளர்த்துக்கொள்ளும் உன்னதப் பண்புகளால், மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்று, இயேசு வாழ்ந்து காட்டிய அந்த வழியில் வாழ, இறையருளை மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.