2018-01-26 15:21:00

விசுவாசக் கோட்பாட்டுப் பேராயப் பிரதிநிதிகள் சந்திப்பு


சன.26,2018. வேதனை, துன்பம், வாழ்வதன் பொருள், மரணம் ஆகியவை, வாழ்வின் எதார்த்தங்கள் என்பதை ஏற்று, இவற்றுக்கு மத்தியில், தனது வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவது குறித்து இக்கால மனிதருக்கு கற்றுக்கொடுப்பதற்கு திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் நடத்திய ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறத்தாழ 81 பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் சகோதரரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும், திருஅவையில் ஒற்றுமையைக் காக்கவும் அழைக்கப்பட்டுள்ள பேதுருவின் வழிவருபவர்க்கும், இப்பேராயத்திற்கும் இடையே, ஒரு சிறப்பான பிணைப்பு உள்ளது என்று கூறினார்.

இப்பேராயத்தின் அன்றாடப் பணிகள், ஆயர்களின் மேய்ப்புப்பணிக்கு, குறிப்பாக, அருளடையாளங்களின் புனிதம் சார்ந்த இக்காலத்தின் விவகாரங்களில் மேய்ப்புப்பணி தேர்ந்துதெளிதலுக்கும், விசுவாசத்தைப் பாதுகாப்பதற்கும் பெரிதும் உதவியாக இருக்கின்றன என்றுரைத்த திருத்தந்தை, இந்த ஆண்டுக் கூட்டத்தில், மீட்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் இடம்பெற்ற கிறிஸ்தவரின் மீட்பு மற்றும் தீராத நோய் பற்றிய உரையாடல்கள் குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

கருணைக் கொலைகளுக்கு விண்ணப்பிப்பது பல நாடுகளில் அதிகரித்து வருகின்றது என்றும், வாழ்வு, அதன் மாண்பால் மதிப்பிடப்படாத இடத்தில் இது இயலக்கூடியதே என்றும், மனித வாழ்வைத் தானாகவே முன்வந்து முடித்துக் கொள்வது, கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக நோக்கப்படுகின்றது என்றும் உரைத்தார் திருத்தந்தை.

இத்தகைய ஓர் உலகில், மனித வாழ்வு, கருவான நேரம் முதல், இயற்கையான மரணத்தை அடையும்வரை, மதிப்புமிக்கது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான மேயப்பர்களின் பணிகளையும் கோடிட்டுக்காட்டினார்.

மனிதர் இலக்கின்றி, தனது குறைகளோடு திசைமாறிச் செல்லும்போது, அவர்களைக் கைவிடாமல், அவர்கள் தங்களின் உண்மையான முகத்தைக் கண்டுகொள்வதற்கு மேய்ப்பர்கள் உதவுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இப்பேராயத்தின் சிறப்பான பணிகளுக்கு மீண்டும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.