2018-01-26 15:25:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவில் திருத்தந்தை


சன.26,2018. மனித மாண்பைக் குறைத்து மதிப்பிடும் ஆபத்தை எதிர்கொள்ளும் அதேவேளை, பாவம், அச்சம், மற்றும் கவலையிலிருந்து, நம் ஒவ்வொரு நாள் வாழ்வையும் அன்புடன் காப்பாற்றும் இறைவனின் கனிவை, கிறிஸ்தவர்கள் அனுபவிக்கின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

சனவரி 25, இவ்வியாழன் மாலை 5.30 மணிக்கு, உரோம் நகரின் புறச்சுவருக்கருகே அமைந்துள்ள புனித பவுல் பசிலிக்காவில், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவாக மாலை வழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்ரேல் மக்கள், எகிப்திலிருந்து தப்பித்துவந்த அனுபவங்கள் பற்றி, மறையுரையில் பகிர்ந்து கொண்டார்.

நைல் நதி தண்ணீரிலிருந்து குழந்தையாக காப்பாற்றப்பட்ட மோசே அவர்களால் இஸ்ரேல் மக்கள் வழிநடத்தப்பட்டபோது, அம்மக்களின் பகைவர்கள், செங்கடலில் அழிந்தனர் என்றுரைத்த திருத்தந்தை, அனைத்துக் கிறிஸ்தவர்களும், திருமுழுக்குத் தண்ணீர் வழியாகக் கடந்து வருகின்றனர் என்று கூறினார்.

திருமுழுக்கு அருளடையாளத்தின் அருள், நம் பகைவர்கள், பாவம் மற்றும் மரணத்தை அழிக்கின்றது என்றும், இந்த அடிப்படை அனுபவத்தை, கிறிஸ்தவர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்கின்றோம் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏனைய மரபுக் கிறிஸ்தவர்களின் திருமுழுக்கை ஏற்பது குறித்துப் பேசிய திருத்தந்தை, அவர்களும் மன்னிப்பைப் பெற்றுள்ளவர்கள், அவர்களிடமும் இறையருள் இயங்குகின்றது என்றும், வேறுபாடுகள் நம்மைப் பிரித்தாலும், நாம் எல்லாரும் ஒரே வானகத் தந்தையால் மீட்கப்பட்டவர்கள் என்பதை ஏற்கிறோம் என்றும் கூறினார்.  

இயேசுவின் பெயரால் கிறிஸ்தவர்கள் துன்புறுவதைக் குறிப்பிட்டு, ஆன்மீக வாழ்வில் நாம் வளர்வது பல நேரங்களில் கடினமாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, போர்கள் மற்றும் பல்வேறு துன்பச் சூழல்களுக்கு அஞ்சி நாடுகளைவிட்டு வெளியேறும் கிறிஸ்தவர்கள், மனித மாண்பைக் குறைத்து மதிப்பிடும் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும் மறையுரையில் கூறினார்.

மேலும், மிலான் புறநகர்ப் பகுதியில் இவ்வியாழனன்று இடம்பெற்ற இரயில் விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் குடும்பங்களுக்கு, திருத்தந்தை தன் செபங்களையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், மிலான் உயர்மறைமாவட்ட பேராயர் Mario Delpini அவர்களுக்கு, திருத்தந்தையின் செபங்களைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார்.  

Pioltello இரயில் நிலையத்தில், பல இரயில் பெட்டிகள் தடம்புரண்டதில், சிலர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமுற்றுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.