2018-01-25 15:38:00

பெரு ஆயர் பேரவையில் திருத்தூதுப்பயணத்தின் எதிரொலி


சன.25,2018. பெரு நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது அவர் எழுப்பிய சில கருத்துக்களை இன்னும் ஆழமாக ஆய்வு செய்யவும், அவற்றைக் குறித்த பணிகளை மேற்கொள்ளவும் ஒரு புதிய பணிக்குழுவை அமைக்க, பெரு ஆயர்கள் பேரவை தீர்மானம் செய்துள்ளது.

மனித வர்த்தகம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறித்து, திருத்தந்தை, தன் உரைகளில் பகிர்ந்துகொண்டதையடுத்து, மார்ச் மாதம் கூடும் ஆயர் பேரவை, புதிய பணிக்குழுவை உருவாக்கி, செயல்திட்டங்களை வகுக்கும் என்று, துருஹில்யோ (Trujillo) பேராயர் மிகுவேல் காப்ரெயோஸ் (Miguel Cabrejos) அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமேசான் பகுதி மக்களைச் சந்தித்தபோது வெளிப்படுத்தியக் கருத்துக்கள் வெகு ஆழமானவை என்று கூறிய ஆயர் டேவிட் மார்த்தினேஸ் அவர்கள், திருத்தந்தையின் அழைப்பின் பேரில், 2019ம் ஆண்டு, உரோம் நகரில் கூடவிருக்கும் அனைத்து அமேசான் பகுதி ஆயர்கள் மாமன்றத்திற்கு முன்னேற்பாடாக பெரு ஆயர்கள் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.