2018-01-25 15:46:00

பிரேசில் கிறிஸ்தவ அன்பியங்கள் மாநாடு - திருத்தந்தை வாழ்த்து


சன.25,2018. சனவரி 23ம் தேதி முதல், 27ம் தேதி முடிய பிரேசில் நாட்டின் லோந்த்ரீனா (Londrina) உயர் மறைமாவட்டத்தில் நடைபெறும் கிறிஸ்தவ அன்பியங்களின் 14வது மாநாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அவர்களை விடுவிக்க இறங்கிவந்துள்ளேன் (வி.ப. 3:7-8) என்று கூறிய இறைவன், மோசேயை அனுப்பியதோடு நின்றுவிடாமல், காலம் நிறைவுற்ற வேளையில், தன் ஒரே மகனையும் அனுப்பினார் என்று இச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, மக்களின் துயரம் கண்டு, இறைவன் அக்கறையற்றவராக என்றும் இருந்ததில்லை என்று கூறியுள்ளார்.

கிறிஸ்தவ அன்பியங்கள், நற்செய்தி அறிவிப்பு பணியிலும், மனித மாண்பை உயர்த்தும் பணியிலும் பெரும் பங்காற்றமுடியும் என்பதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, மனிதர்களைப் புறந்தள்ளும் இன்றையக் கலாச்சாரத்திற்கு ஒரு மாற்றுக் கலாச்சாரமாக, கிறிஸ்தவ அன்பியங்கள் இயங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தையின் பெயரால், இந்த மாநாட்டிற்கு செய்தி அனுப்பியுள்ள திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் ஆசீரை அவர்களுக்கு உறுதி கூறி, திருத்தந்தைக்காக செபிக்கும் விண்ணப்பத்துடன் இச்செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.