2018-01-25 15:17:00

பின்லாந்து லூத்தரன் சபை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை


சன.25,2018. லூத்தரன் சபையினரும், கத்தோலிக்கரும் சீர்திருத்த இயக்கத்தின் நூற்றாண்டினை கடந்த ஆண்டு கொண்டாடியதை, கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் இறுதியில் நினைவுகூர்ந்து மகிழ்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த லூத்தரன் சபை பிரதிநிதிகளிடம் கூறினார்.

சனவரி 25, இவ்வியாழனன்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவை சிறப்பிக்கும் வகையில், பின்லாந்திலிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள லூத்தரன் சபை பிரதிநிதிகளை, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பின்லாந்தின் பாதுகாவலர் புனித ஹென்ரிக் அவர்களின் திருநாளையொட்டி வருகை தந்திருக்கும் இப்பிரதிநிதிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அண்மைய ஆண்டுகளில், லூத்தரன் சபையினரும், கத்தோலிக்கரும் இணைந்து மேற்கொள்ளும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடுகளில், கடந்த கால மோதல்களும், விவாதங்களும் இல்லாமல், ஒற்றுமை நிலவுவது, மனநிறைவைத் தருகிறது என்று திருத்தந்தை கூறினார்.

இறை நம்பிக்கை குறைந்து வரும் இன்றைய காலத்தில், கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் இணைந்து, வாழும் கடவுளுக்கு சாட்சிகளாக வாழ்வதே, கிறிஸ்தவ ஒன்றிப்பின் மிக முக்கிய பணி என்று தன் உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.

ஒன்றிப்பு, அமைதி, காயங்களைக் குணமாக்குதல் ஆகிய பணிகளை ஆற்ற, கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இறைவன் வரமருள, பணிவான மனதுடன் அவரிடம் நாம் செபிப்போம் என்று, திருத்தந்தை தன் உரையின் இறுதியில் வேண்டுகோள் விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.