2018-01-25 15:04:00

இமயமாகும் இளமை : அப்பாவின் கண்டிப்பின் பலனை உணர்ந்த மகன்


“காற்றாடியை அணைக்காமல் வெளியே போகிறாய், ஆளில்லாத அறையில் டி.வி. ஓடுகிறது, அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே பேப்பர் கிடக்குது பார்… இப்படி சின்னச்சின்ன விடயத்திற்கெல்லாம், அந்த இளைஞனின் அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. ”வேலை கிடைத்ததும் எங்காவது வெளியூர் போய்விட வேண்டும்”என்று எண்ணிக்கொண்டான் அந்த இளைஞன். அன்று நேர்காணலுக்குச் சென்ற அவன், அந்த கட்டடத்தின் பெரிய கதவு சற்றே திறந்திருந்தாலும், அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு, உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவதுபோல் இருந்ததைப் பார்த்தான். வாயிற்காப்பவரையும் காணவில்லை. அந்தத் தாழ்ப்பாளைச் சரிசெய்து கதவைச் சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான். நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன. அந்த இடத்தில், குழாய்த் தண்ணீர், செடிகளுக்குப் பாயாமல், நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது. குழாயைக் கையில் எடுத்த அவன், செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான். வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. மெதுவாக மாடிப்படியில் ஏறிய அவன், இரவில் போடப்பட்ட மின்விளக்கு, காலை பத்து மணியாகியும் ஒளி வீசிக்கொண்டு இருந்ததைக் கண்டான். “விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான். மாடியில் பெரிய அறையில், நேர்காணலுக்காக காத்திருந்த கூட்டத்தைப் பார்த்த அவனுக்கு ஒரே திகைப்பு. பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ‘வெல்கம்’ எழுத்து தலைகீழாக இருந்ததைக் கவனித்தான். அதைக் காலால் சரிசெய்துவிட்டு உள்ளே நுழைந்தான். அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சுற்றிக் கொண்டிருந்தன. யாருமே இல்லாத இடத்தில் ஏன் மின் விசிறி ஓடுகிறது? என்ற அப்பாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான் அவன். நேர்காணலுக்கு இவனது முறை வந்தபோது, கலக்கத்துடனே அதிகாரி முன்புபோய் நின்றான். படிப்புச் சான்றிதழ்களை வாங்கிப் பார்த்த அதிகாரி, “நீங்கள் எப்போது வேலையில் சேருகிறீர்கள் பாஸ்?” என்று கேட்டார். அவனது குழம்பிய நிலையைக் கண்ட அந்த அதிகாரி, என்ன யோசிக்கிறீர்கள்?, நாங்கள் இங்கே யாரிடமும் ஒரு கேள்விகூட கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவரின் மேலாண்மையைத் தெரிந்துகொள்வது கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்துவிட்டு, புகைப்பட கருவி வழியாக கண்காணித்தோம். இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, தேவையற்று ஓடிய மின்விசிறி, தலைகீழாக இருந்த கால்மிதி போன்ற எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள்தான் அத்தனையையும் சரிசெய்துவிட்டு வந்தீர்கள். எனவே நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்”என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.