2018-01-24 15:18:00

சமூகத் தொடர்பு உலக நாள் - அருள்பணி விகனோ பேட்டி


சன.24,2018. பொய் செய்திகளை அழிப்பதற்கு, தனிப்பட்டவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இடையே, புது வழிகளில் கூட்டுறவு முயற்சிகள் தேவை என்று, திருப்பீட சமூகத்தொடர்பு செயலகத்தின் தலைவர், அருள்பணி தாரியோ எதொவார்தோ விகனோ (Dario Edoardo Viganò) அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சனவரி 24, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 52வது சமூகத் தொடர்பு உலக நாளுக்கென வழங்கியுள்ள செய்தியைக் குறித்து பேட்டியளித்த அருள்பணி விகனோ அவர்கள், திருத்தந்தையின் செய்தி, விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

"தங்களுக்குள்ளேயே பொய்யைப் பேசியும், தங்களைச் சுற்றி பொய்யைக் கேட்டும் வாழ்வோர், விரைவில் உண்மையின் மீதும், தங்கள் மீதும் மதிப்பை இழந்து, அடுத்தவர் மீதும் மதிப்பை இழந்துவிடுவர்" என்று, இரஷ்ய எழுத்தாளர், Dostoevsky அவர்கள் கூறியுள்ள கூற்றை, திருத்தந்தை, தன் செய்தியில் மேற்கோளாகப் பயன்படுத்தியுள்ளதை, அருள்பணி விகனோ அவர்கள், தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

1967ம் ஆண்டு திருத்தந்தை அருளாளர் ஆறாம் பவுல் அவர்களால் உருவாக்கப்பட்ட சமூகத் தொடர்பு உலக நாள், ஒவ்வோர் ஆண்டும், தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவான, பெந்தக்கோஸ்து திருவிழாவுக்கு முந்தைய ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்படுகிறது.

இவ்வாண்டு, மேமாதம் 13ம் தேதி, இந்த உலக நாள், திருஅவையில் 52வது முறையாகச் சிறப்பிக்கப்படவிருக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.