2018-01-24 14:56:00

52வது சமூகத் தொடர்பு உலக நாள் - திருத்தந்தையின் செய்தி


சன.24,2018. இறைவன் நமக்காக வகுத்துள்ள திட்டத்தின் ஒரு பகுதி, சமூகத் தொடர்பு என்றும், நாம் உடன்பிறந்தோர் என்ற உணர்வைப் பெறுவதற்கு மிக அடிப்படையான வழி, தொடர்புகள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 52வது சமூகத் தொடர்பு உலக நாளுக்கென சனவரி 24, இப்புதனன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி, 'உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' (யோவான் 8:32) என்ற தலைப்பையும், "பொய் செய்திகளும், அமைதிக்காக இதழியலும்" என்ற உபதலைப்பையும் கொண்டுள்ளது.

மிகத் துரிதமாக மாறிவரும் சமூகத் தொடர்புகளும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் 'பொய்யான செய்திகளை'ப் பரப்பிவருவதைக் காண்கிறோம் என்று இச்செய்தியின் துவக்கத்தில் கவலையை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'பொய் செய்திகள்' என்பதைக் குறித்து நான்கு பகுதிகளில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்.

1.'பொய் செய்திகளில்' உள்ள 'பொய்மை' என்ன? 2.'பொய் செய்திகளை' எவ்விதம் அடையாளப்படுத்துவது? 3.'உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' (யோவான் 8:32) 4.அமைதியே உண்மையான செய்தி என்ற நான்கு பிரிவுகளில் திருத்தந்தை தன் கருத்துக்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

உண்மைச் செய்திகளைப் போலவே வேடமிட்டு வரும் பொய் செய்திகள், மக்களுக்குப் பழக்கமான முற்சார்பு எண்ணங்களைச் சுமந்து வருவதால், அவை மக்களால் விரும்பி ஏற்கப்படுகிறது என்றும், அதிகாரப்பூர்வமான மறுப்புக்கள் சொல்லப்பட்டாலும், பொய்யான செய்திகள்,  மக்களிடையே விரைவில் ஊடுருவிச் செல்கின்றன என்றும் திருத்தந்தை தன் கவலையை வெளியிட்டுள்ளார்.

சமுதாயத்தில், புழக்கத்தில் இருக்கும் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி, இத்தகையைச் செய்திகளை எவ்வித தயக்கமும் இன்றி, மக்கள் பரப்பி வருவதால், பொய்யான செய்திகளின் வேடம் கலைக்கப்படுவதில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

பொய் செய்திகளின் வேடத்தைக் கலைப்பது எளிதான செயல் அல்ல என்றாலும், பல கல்விக் கூடங்கள், அத்தகையப் பணியைச் செய்து வருகின்றன என்று தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையை உள்ளங்களில் பதிக்கும் கல்வியில் இன்னும் அதிகமான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

உண்மை என்பது ஒருவர் தன் வாழ்வில் தொடர்ந்து தேடி வரும் விடயம் என்பதை, தன் செய்தியில் வலியுறுத்தும் திருத்தந்தை, பொய் எப்போதும், பிளவுகளையும் மோதல்களையும்  உருவாக்கி, மக்களைப் பிரிக்கும் என்றும், உண்மை, மக்களை ஒருங்கிணைக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்மையை முறியடிக்க வெறும் செயல் திட்டங்கள் மட்டும் போதாது, மாறாக, உண்மையை நோக்கி மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை, சமூகத் தொடர்புகள், இந்த உண்மையில், மக்களை இணைக்கும் பணியைச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

இலாபம் ஈட்டும் நோக்கத்துடன், வெறுப்பையும், வன்முறையையும் வளர்க்கும் சொல்லாடலைப் பயன்படுத்தும் இதழியலுக்கு ஒரு மாற்றாக, உண்மையை, அன்பை பறைசாற்றும் இதழியலை வளர்ப்பது கிறிஸ்தவ சமூகத் தொடர்புக் கலையின் இலக்கணம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

அமைதியின் கருவியாய் என்னை மாற்றும் என்று அசிசி நகர் புனித பிரான்சிஸ் உருவாக்கிய செபத்தைத் தழுவி, "எங்கே கத்துதல் உள்ளதோ, அங்கு கேட்கும் பழக்கத்தை வளர்ப்போம்; எங்கே குழப்பம் நிலவுகிறதோ, அங்கே, நல்லிணக்கத்தை உருவாக்குவோம்" என்ற வார்த்தைகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 52வது சமூகத் தொடர்பு உலக நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியின் இறுதியில், ஒரு செபத்தை வடிவமைத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.