2018-01-23 15:31:00

புலம்பெயர்ந்தோர் குறித்த இஸ்ரேலின் அறிவிப்புக்கு எதிர்ப்பு


சன.23,2018. இஸ்ரேலில் வாழ்கின்ற எரிட்ரியா மற்றும் சூடான் நாடுகளின் புலம்பெயர்ந்த மக்கள், வருகிற மார்ச் 30ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் சிறைவைக்கப்படுவார்கள் என்று, இஸ்ரேல் அரசு அதிகாரிகள் அறிவித்திருப்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர், புனித பூமி கத்தோலிக்கத் தலைவர்கள்.

நாட்டைவிட்டு வெளியேறு அல்லது சிறைக்குச் செல் என அறிவிக்கும் இஸ்ரேல் அரசின் நடவடிக்கை, புலம்பெயர்ந்துள்ள இம்மக்களை மீண்டும் போர் இடம்பெறும் பகுதிகளுக்கும், ஆபத்துக்கும் அனுப்பிவைக்கும் செயலாக உள்ளது எனக் கூறும் புனித பூமித் தலைவர்களின் அறிக்கை, சர்வாதிகார நிலைகளுக்கும், போருக்கும் அஞ்சி அடைக்கலம் தேடும் புலம்பெயர்ந்தோர் குறித்து, கத்தோலிக்கத் திருஅவை பாராமுகமாய் இருக்க இயலாது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவை அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Pierbattista Pizzaballa, புனிதபூமி பாதுகாவலர் அருள்பணி Francesco Patton உட்பட புனித பூமி கத்தோலிக்கத் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டைவிட்டு வெளியேற முன்வரும் எரிட்ரியா மற்றும் சூடான் நாடுகளின் புலம்பெயர்ந்த மக்கள் ஒவ்வொருவருக்கும், விமானப்பயணச் சீட்டும், ஏறத்தாழ 850 யூரோக்களும் கொடுப்பதாய் அறிவித்துள்ள இஸ்ரேல் அரசு, பெண்களும், குழந்தைகளும், அடிமைத்தொழிலால் பாதிக்கப்பட்டுள்ளோரும், பாலியல் வன்செயலுக்கு உள்ளாகியுள்ளோரும் நாட்டைவிட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளது.  

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.