2018-01-22 15:37:00

லீமாவில் திருத்தந்தையின் மூவேளை செப உரை


சன.22,2018. அன்பு நண்பர்களே, ஆண்டவர் நம்பிக்கையுடன் உங்களை நோக்குகிறார். வாழ்வின் பல்வேறு துன்பங்கள், உங்களைச் சோர்வுறச் செய்யலாம், ஆயினும், உங்கள் நாட்டுத் திருஅவை வழங்கியுள்ள, புனிதர்கள் லீமா ரோஸ், மார்ட்டின் தெ போரஸ் போன்ற பல புனிதர்களின் எடுத்துக்காட்டான வாழ்வை, மனந்தளராமல், துணிச்சலுடன் பின்பற்றுங்கள். எந்தவிதப் போலியான தோற்றமின்றி, நாம் இருப்பது போன்றே கடவுள் நம்மீது அன்பு செலுத்துகிறார். டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்ப்பதற்கு நாம் எல்லாரும் விரும்புகின்றோம் என்பதை நான் அறிவேன். ஆனால் இந்த டிஜிட்டல் முறை, படங்களுக்கு மட்டுமே பொருந்தும். நாம் ஏனைய மனிதர்களை, உலகை, அல்லது நம்மையே டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படமாக ஆக்க முடியாது. மனித இதயத்தையும் இவ்வாறு மாற்ற முடியாது. ஏனெனில், இதயத்திலே, உண்மையான அன்பையும், மகிழ்ச்சியையும் காண முடியும். நீங்கள் இருப்பது போலவே, இயேசு உங்களை அன்புகூர்கிறார். உங்கள் ஒவ்வொருவருக்கும் அவர் ஒரு கனவை வைத்திருக்கிறார். நாம் நம்முடனோ அல்லது மற்றவருடனோ மனந்தளர்ந்து போனாலும்கூட, கடவுள் நம்மோடு சோர்ந்துபோவதே இல்லை. இவ்வாறு பெரு நாட்டு மக்களையும், இளையோரையும் ஊக்கப்படுத்திய திருத்தந்தை, ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயக குடியரசில், அனைத்து விதமான வன்முறைகளையும் தவிர்ப்பதற்கு, காங்கோ அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அன்புக்குரிய காங்கோ நாட்டில் இடம்பெறும் வன்முறைகளைக் களைவதற்கு அதிகாரிகள் எவ்வளவுதூரம் தங்களை அர்ப்பணிக்க முடியுமோ அவ்வளவு தூரம் அர்ப்பணித்து, பொது மக்களின் நலனுக்கு ஆதரவான  தீர்வுகளைக் காணுமாறும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார். காங்கோவில் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான மக்கள்மீது, காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதால், திருத்தந்தையும், தலத்திருஅவையும் அந்நாட்டில் அமைதி நிலவ அழைப்பு விடுத்துள்ளனர். இஞ்ஞாயிறன்று நண்பகல் மூவேளை செப உரையாற்றியபின்னர், லீமா நகர் திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவருந்தி, சிறிது நேரம் ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.