2018-01-22 15:05:00

திருத்தந்தையின் 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயண நிறைவு


சன.22,2018. “இப்பயணம் இயலக்கூடியதாய் அமைத்த எல்லாருக்கும் நன்றி. உங்கள் எல்லாரையும் சந்தித்தது எனக்குப் பயனுள்ளதாய் இருந்தது. உங்களுக்கு எனது நன்றி” என்ற வார்த்தைகளை சனவரி 22, இத்திங்களன்று தன் டுவிட்டரில் வெளியிட்டு, தனது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்து, இத்திங்கள் பிற்பகல் 2.15 மணிக்கு உரோம் சம்பிப்பினோ இராணுவ விமான நிலையம் வந்திறங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 13 மணி 30 நிமிடங்கள் கொண்ட இவ்விமானப் பயணத்தில், தான் கடந்து வந்த, பெரு, கொலம்பியா, வெனெசுவேலா, போர்த்துக்கல், இஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளின் தலைவர்களுக்கு, ஆசீரும், வாழ்த்தும் செபமும் கொண்ட தந்திச் செய்திகளையும் அனுப்பினார் திருத்தந்தை. மேலும், பயணத்தில்  செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்னார். உரோம் சம்பிப்பினோ விமான நிலையத்திலிருந்து வத்திக்கான் திரும்பிய வழியில், உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று, உரோம் மக்களுக்கு குணம் அளிக்கும் Salus Populi Romani அன்னை மரிக்கு நன்றியாக, மலர்களை அர்ப்பணித்து செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். சிலே, பெரு ஆகிய இரு தென் அமெரிக்க நாடுகளுக்கு மேற்கொண்ட ஒரு வாரத் திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாளாகிய சனவரி 21, இஞ்ஞாயிறு காலையில், பெரு நாட்டின் தலைநகர் லீமா நகரின் திருப்பீட தூதரகத்தில், அந்நாட்டின் Arequipa, Ayacucho, Cuzco, Castro ஆகிய நான்கு சிறைகளிலிருந்து, திருத்தந்தையைச் சந்திப்பதற்காக ஒரு நாள் அனுமதியுடன் வந்திருந்த ஒரு பெண் மற்றும் மூன்று ஆண் கைதிகளைச் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை. எனது சிலே மற்றும் பெரு நாடுகளுக்கான எனது திருத்தூதுப் பயணத்தில், பல்வேறு வழிகளில் குறிப்பாக, செபத்தின் வழியாக என்னோடு துணைநின்ற அனைவருக்கும் நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்ற டுவிட்டர் செய்தியையும் இத்திங்கள் மாலையில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 2013ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை ஏற்றது முதல் இதுவரை, ஜோர்டன், பாலஸ்தீனம், இஸ்ரேல், துருக்கி, தென் கொரியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், ஐக்கிய நாடுகள் நிறுவனம், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்ஸ் நாட்டிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற அவை, மியான்மார், பங்களாதேஷ் நாடுகள் உட்பட, 33 நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். முதல் திருத்தூதுப் பயணமாக, 2013ம் ஆண்டு ஜூலை 22 முதல் 29 வரை, பிரேசில் நாடு சென்று, 28வது உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இச்சனிக்கிழமையன்று, துருஹில்யோ பேராயர் இல்லத்தில், Scholas Occurrentes அமைப்பின் ஒரு மாணவர் குழுவை, முப்பது நிமிடங்களுக்குமேல், சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். Scholas Occurrentes என்பது, உலக அளவில் பள்ளி மாணவர்களை இணைக்கும் அமைப்பாகச் செயல்படுவதாகும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் அய்ரெஸ் உயர்மறைமாவட்ட பேராயராகப் பணியாற்றுகையில், 2001ம் ஆண்டில் Scholas Occurrentes அமைப்பை முதலில் உருவாக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.