2018-01-22 12:28:00

ஆழ்நிலை தியான அருள்சகோதரிகளுக்கு திருத்தந்தையின் உரை


சன.22,2018. அன்பு சகோதரிகளே, கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற்றுக்கொண்டீர்கள் (காண்க. உரோமையர் 8:15-16) என்று புனித பவுல் கூறிய வார்த்தைகளைக் கேட்டோம். கிறிஸ்தவ அழைப்பின் உன்னதத்தை இவ்வார்த்தைகள் விளக்குகின்றன.

ஆழ்நிலை தியான வாழ்வை மேற்கொண்டுள்ள நீங்கள், இந்த அழைப்பின் தனித்துவமிக்க வழியைத் தேர்ந்துள்ளீர்கள். உங்கள் செபங்கள், ஒரு கண்ணோட்டத்தில், மறைபரப்புப்பணியாகும். இந்த கண்ணோட்டத்தில், உலகின் அனைத்துச் சகோதரர், சகோதரிகளுடன் நீங்கள் இணைகிறீர்கள்.

"அன்பு மட்டுமே, திருஅவை உறுப்பினர்களை, செயலாற்ற வைக்கிறது. அன்பில்லையேல், திருத்தூதர்கள், நற்செய்தியை அறிவித்திருக்க மாட்டார்கள்; மறைசாட்சிகள், இரத்தம் சிந்தியிருக்க மாட்டார்கள்" என்று குழந்தை இயேசுவின் புனித தெரேசா கூறினார்.

அன்புதான், துன்புறும் சகோதரர், சகோதரிகளுடன் நம்மை இணைத்து, "நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார்" (திருப்பாடல் 117:5) என்று சொல்லவைக்கிறது. சிறைக்கைதிகள், குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர், பெரும் இன்னல்களுக்கு உள்ளானோர் சார்பில் நீங்கள் செபிக்கிறீர்கள். உங்கள் செபங்கள் வழியே, துன்புறும் பல குடும்பங்களை நீங்கள் அரவணைக்கிறீர்கள். முடக்குவாதமுற்றவரை இயேசுவிடம் கொணர்ந்த நண்பர்களைப்போல் நீங்கள் செயலாற்றுகிறீர்கள்.

இக்காரணத்திற்காக, ஆழ்நிலை தியான வாழ்வு, உள்ளங்களை குறுக்குவதற்குப் பதில், விரிவாக்குகிறது. உங்கள் செபங்களால் மட்டுமல்ல, தேவைப்பட்டால், உங்கள் பணியாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். நீங்கள் மேற்கொள்ளும் பரிந்துரை செபங்கள் வழியே, உலகத் திருஅவையிலும், பெரு நாட்டுத் தலத்திருஅவையிலும் ஒற்றுமை உருவாகட்டும். உங்கள் குழுமங்களில் விளங்கும் உடன்பிறந்த உணர்வு, கலங்கரை விளக்காக ஒளி வீசட்டும்.

அன்பு சகோதரிகளே, திருஅவைக்கு நீங்கள் தேவை. திருஅவை, அருள்பணியாளர்கள், ஆயர்கள், துறவியர், குடும்பத்தினர், அனைவருக்காகவும் செபியுங்கள். துன்புறுவோருக்காகவும், துன்புறுத்துவோருக்காகவும் செபியுங்கள். எனக்காக செபிக்க மறவாதீர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.