2018-01-21 12:56:00

பெரு நாட்டின் துருஹில்யோவில் திருத்தந்தை


சன.21,2018. எனது பெரு நாட்டுத் திருத்தூதுப்பயணம், "நம்பிக்கையால் ஒன்றிணைவது" என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது. ஆசீர்வாதங்கள் நிறைந்த வாழ்வைப் பெற விரும்பும் ஏராளமான மக்களின் இதயங்களில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். மனக்காயங்களைக் குணப்படுத்துவதற்கு, இரக்கம் நிறைந்த இதயத்தைத் தவிர, வேறு எந்த சிறந்த மருந்தும் கிடையாது. சனவரி 20, இச்சனிக்கிழமையன்று, தனது டுவிட்டரில் இவ்வாறு செய்திகளை வெளியிட்டு, பெரு நாட்டில் இரண்டாவது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். லீமா நகரின் திருப்பீட தூதரகத்திலிருந்து இச்சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, துருஹில்யோ (Trujillo) நகருக்கு, LATAM விமானத்தில் பயணத்தை மேற்கொண்டார் திருத்தந்தை. பெரு நாட்டின் வடக்கே, லீமாவுக்கு 560 கிலோ மீட்டர் தூரத்தில், பசிபிக் பெருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள துருஹில்யோ நகரம், நித்திய வசந்த நகரம் என அழைக்கப்படுகின்றது. இந்நகரம், பெரு நாட்டின் சுதந்திரத்தின் தொட்டில் மற்றும் நீதித்துறையின் தொட்டில் எனவும் கருதப்படுகின்றது. பெரு நாட்டில், மக்கள் தொகையை அதிகமாகக் கொண்டுள்ள இரண்டாவது பெரிய நகரமான துருஹில்யோ, அந்நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. இதனால், பெரு நாட்டு காங்கிரஸ் அவை, 1822ம் ஆண்டில், இந்நகரை, "புகழுக்குரிய நகரம் மற்றும் தந்தை நாட்டிற்கு விசுவாசமுள்ள நகரம்" என அழைத்தது. துருஹில்யோ நகர் பகுதியில் இச்சனிக்கிழமையன்று பயண நிகழ்வுகளை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். த்ருஹில்யோ பகுதி அடிக்கடி கடும் புயல்களால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. துருஹில்யோ நகருக்கு, தென்மேற்கே நான்கு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கடற்கரை நகரமான ஹூவான்சாக்கோ (Huanchaco), கடல் அலைகள் பொங்கி வரும் பகுதியாகும். பிரமாண்டமான அலைகள், பாறைகளின்மீது மோதிவரும் இயற்கை அழகை இரசிப்பதற்கே சுற்றுலா பயணிகள் நிரம்பி வழிகின்றனராம். இப்பகுதி, உலகின் அலைகள் பாதுகாப்பு அமைப்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதி, சுற்றுலா பயணிகளையும் அதிகமாக ஈர்க்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.