2018-01-21 13:11:00

துருஹில்யோ வளாகம் அன்னை மரியா பக்திமுயற்சி - திருத்தந்தை உரை


சன.21,2018. அன்பு சகோதரர்களே, சகோதரிகளே! விடுதலை வேட்கைக் கனவுகளுக்கு உயிர் கொடுத்த, அழகான மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க, இந்த துருஹில்யோ (Trujillo) வளாகத்தில், Otuzco அன்னை மரியாவை சந்திக்க கூடியுள்ளோம். உங்கள் கண்ணீரையும், ஏக்கங்களையும், மகிழ்வையும் கண்டுள்ள அன்னை மரியா, பெரு நாட்டு மக்களின் இதயங்களை அறிந்துள்ளார். அவர் ஒரு நாளும் தன் மக்களைக் கைவிடுவதில்லை.

இந்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும், அங்கு முக்கியத்துவம் வாய்ந்த புனிதர்கள், அன்னை மரியா, மற்றும் இயேசுவின் சிறப்பு திருவுருவங்களால் இந்த வளாகத்தை அலங்கரித்துள்ளீர்கள். இறைவன் எவ்வாறு அனைத்து ஊர்களிலும் மக்களுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறார் என்பதன் எடுத்துக்காட்டாக இவை உள்ளன.

'Otuzco நுழைவாயிலின் அமலமரி அன்னை' என உங்களால் அழைக்கப்படும் அன்னை மரியா மீது நீங்கள் எவ்வளவு அன்பு கொண்டுள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களுடன் இணைந்து இன்று இந்த அன்னை மரியாவை, வாயிலின் அன்னை மரியாவை, 'இரக்கம் மற்றும் நம்பிக்கையின் அன்னை' என அறிக்கையிட ஆவல் கொள்கிறேன்.

நம்மை தொடர்ந்து பாதுகாத்து வரும் அன்னை மரியா, உண்மையான வாழ்வுக்குரிய பாதையை நோக்கி கதவைத் திறந்து விடுகிறார். நம்மோடு உடன் வந்து, நம்மை, இரக்கத்தின் நுழை வாயிலாக இருக்கும் இயேசுவை நோக்கி, அதாவது, நம் இல்லத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார். 2015ம் ஆண்டு நாம்,  இரக்கத்தின் ஆண்டை சிறப்பித்தோம். கடவுளின் அன்பையும் ஆறுதலையும் அனுபவிக்கவும், அவரிடமிருந்து நம்பிக்கையை பெறும்படியாகவும், இரக்கத்தின் கதவு வழியாக நுழைந்த நாம், அதே இரக்கத்தை மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என ஆவல் கொள்கிறேன்.

இரக்கம் மற்றும் நம்பிக்கையின் அன்னை மரியாவின்  அரவணைப்பில் இருக்கும் இந்த நாடு, இறைவனின் நன்மைத்தனத்தாலும். அன்பாலும் நிரப்பப்பட்டு, அதனை மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என ஆவல் கொள்கிறேன். காயங்களுக்கு குணமளிப்பதற்கு, இரக்கம் நிறைந்த இதயத்தை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை. கானா திருமணத்தில் மற்றவரின் துயரை உணர்ந்து செயல்பட்ட அன்ன மரியாவைப்போல், மகிழ்ச்சி எனும் திராட்சை இரசக் குறைவால் துயருறும் மக்களை இரக்கத்துடன் அரவணைப்போம். அன்னை மரியாவை உற்று நோக்கும் இவ்வேளையில், நம் அன்னையர்கள், மற்றும், பாட்டிகள் குறித்தும் சிந்திப்போம். அவர்கள் இல்லையென்றால் இந்த பெரு நாடு எப்படியிருந்திருக்கும்? அவர்களின்றி நம் வாழ்வு எப்படி இருந்திருக்கும்? அன்னை மரியா மீது நாம் கொண்டிருக்கும் அன்பு, நம் அன்னை மற்றும் பாட்டியையும், அனைத்து பெண்களையும் பாராட்டி நன்றியுரைக்க உதவ வேண்டும். இவர்களே அமைதியில் சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்கிறார்கள். அமைதியும் நம்பிக்கையுமே இவர்களின் பலம். பெண்களே, உங்களின் சாட்சிய வாழ்வுக்கு நன்றி.

உங்கள் அன்னையரையும் பாட்டிகளையும் பாராட்டும் இதே வேளையில், இன்று, இந்த அமெரிக்கக் கண்டத்தை பாதித்துள்ள, பெண் கொலைகளுக்கு எதிராக போராடுமாறு அழைக்கிறேன். பலவகையான வன்முறைகள் இன்று நான்கு சுவர்களுக்குள் மறைக்கப்பட்டதாக உள்ளன. அனைத்து விதமான வன்முறைகளையும் எதிர்க்கும் கலாச்சாரத்தையும், அரசு சட்டங்களையும் உருவாக்க உழைக்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.

மற்றவர்களின் துன்பங்கள் குறித்து உணர்வற்றவர்களாகவும், அக்கறையவர்களாகவும் இருக்கும் தீமைக்கு எதிரான பாதையை காண்பிப்பவராக, நம் இரக்கம் மற்றும் நம்பிக்கையின் அன்னையாகிய நுழைவாயிலின் அன்னை மரியா உள்ளார். துன்புறும் சகோதர சகோதரிகள் குறித்து அக்கறையுடையவர்களாக வாழும் ஒரு கலாச்சாரத்தை ஊக்குவித்து பரப்ப உதவும் அன்னை மரியா, தன் மகனை நோக்கி நம்மை அழைத்துச் செல்வாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.