2018-01-20 16:01:00

பெரு நாட்டின் அமேசானின் Puerto Maldonadoவில் திருத்தந்தை


சன.20,2018. சனவரி 19, இவ்வெள்ளி காலை ஏழு மணிக்கு, லீமா நகரின் திருப்பீட தூதரகத்தில் தனியாக திருப்பலியை நிறைவேற்றிய பின்னர், லீமா நகர் பன்னாட்டு விமான நிலையம் சென்று Puerto Maldonado நகருக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நகரத்தின் Padre Jose Aldamiz விமான நிலையம் சென்ற திருத்தந்தையை, 150 சிறார் உள்ளிட்ட பொதுநிலையினர் குழு ஒன்று, பலவண்ண பூர்வீக உடைகளில் பாடி, ஆடி வரவேற்றது. Matsigenka பூர்வீக இனக் குடும்பம் ஒன்று, திருத்தந்தைக்கு மலர்களைக் கொடுத்து வரவேற்றது. அவ்விடத்திலிருந்து 4.3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Coliseo Madre de Dios விளையாட்டு அரங்கத்திற்கு காரில் சென்றார். திருத்தந்தை சென்ற வழியில், பூர்வீக இன மக்கள் பாப்பிறைக் கொடிகளையும், வெள்ளைநிற பலூன்களையும் ஆட்டிக்கொண்டே திருத்தந்தையின் காரின் பின்னே ஓடினர் என்று செய்திகள் கூறுகின்றன. Coliseo Madre de Dios அரங்கத்தில், Harakbut, Esse-ejas, Shipibos, Ashaninkas, Juni Kuin இனத்தவர் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட பூர்வீக இனக் குழுக்களின் நான்காயிரம் பிரதிநிதிகளும், பெண்களும், சிறாரும் இசைக்கருவிகளுடன் அமர்ந்திருந்தனர். இவர்கள் மத்தியில், பச்சைநிற எளிமையான திறந்த காரில் வலம் வந்து மேடையில் அமர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில், Arambut இன முதியவர்கள் பாடிக்கொண்டே, வரவேற்பு நடனம் ஒன்றை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில், அமேசான் பகுதியின் Harakbut பூர்வீக இனப் பிரதிநிதி Hector Sueyo அவர்கள், திருத்தந்தையிடம் பூர்வீக இனத்தவரின் நிலைமையைப் பகிர்ந்து கொள்கையில், தங்களின் நிலம் முழுவதும் சுரண்டப்படுகின்றது. வெளிநாட்டவர் தங்களைக் கலந்துபேசாமலே, இங்கு நுழைந்து எங்கள் பூமியை அழிக்கின்றனர். எங்களின் நதிகளை, மரணத்தின் கறுப்புத் தண்ணீராக மாற்றுகின்றனர். மரங்கள் மறைவதையும், மீன்கள் இறப்பதையும், நதிகள் மாசுபடுவதையும் பார்க்கும் எம் மக்கள் மிகுந்த கவலையடைகின்றனர். நாம் இந்தப் பூமி கோளத்தை அழிக்கின்றோம் என்பதற்காக, வானம் கோபமாக இருக்கின்றது மற்றும் கண்ணீர் சிந்துகின்றது என்று கவலையுடன் கூறினார். பின்னர் இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு, திருத்தந்தையின் இறைவா உமக்கே புகழ் என்ற, Laudato si' திருமடலின் பிரதிகள் அளிக்கப்பட்டன. பொதுவான நம் இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கு, பூர்வீக இன மக்களின் நடவடிக்கைகளைப் பாராட்டி நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை. பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார். திருத்தந்தை உரையாற்றுகையில், அமேசான் திருஅவையின் இதயம் என்று சொல்லி, இப்பகுதி மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தபோது, அதில் மகிழ்ந்த மக்கள், இடையிடையே உரக்க கைதட்டி, மத்தளங்களையும் முழக்கினர். திருத்தந்தையின் உரைக்குப் பின்னர், கழுத்திலிருந்து செயலிழந்து சக்கர நாற்காலியில் இருந்த ஓர் ஆண், திருத்தந்தையின் தலையில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் பறவை இறகுகள் கொண்ட தொப்பியை வைத்தார். திருத்தந்தையின் கழுத்தில், பூர்வீக இனத்தவரின் மணிகளாலான மாலையை அணிவித்தார். இவர், ஒரு போராட்டத்தின்போது, காவல்துறை சுட்டதில் பாதிக்கப்பட்டிருப்பவர்.

Coliseo Madre de Dios விளையாட்டு அரங்கில் இச்சந்திப்பை நிறைவுசெய்து, மீண்டும் திறந்த காரில், Puerto Maldonado நகரின் Jorge Basadre கல்வி நிறுவனம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். Coliseo Madre de Dios அரங்கில் நடந்த இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, மூன்று மணி நேரம், உப்பங்களிப் பாதையில் படகில் பயணம் செய்துள்ள, Palma Real பூர்வீக இனத் தலைவர் Cesar Yojaje, அவர்கள் கூறுகையில், அரசு தங்கள் நிலங்களைத் திருடி பூங்காவாக மாற்றியதற்கு பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும், பூர்வீக இனத்தவரின் நிலங்கள் திருப்பியளிக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார். மேலும், மூன்று முக்கிய பூர்வீக இனக் குழுக்களின் தலைவர்கள் இவ்வாரத்தில் திருத்தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில், இரண்டு கோடி ஹெக்டர் நிலப்பகுதியின் உரிமையை பூர்வீக இனத்தவருக்கு அரசு தரவேண்டும் என்ற விண்ணப்பத்திற்கு திருத்தந்தை ஆதரவளிக்க வேண்டுமென்றும், சட்டத்திற்குப் புறம்பேயான தங்கச் சுரங்கப் பணிகளால் மாசடைந்துள்ள ஆறுகளை, பெரு நாட்டு அரசு சுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.