2018-01-20 14:59:00

அமேசான் பகுதி மக்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


சன.20,2018. அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, உங்களுடன் இருக்கும் இவ்வேளையில், "என் ஆண்டவரே, உமக்கேப் புகழ்" என்று புனித பிரான்சிஸ் பாடிய பாடல் என் உள்ளத்தில் நிறைகிறது. இந்த வாய்ப்பை அளித்த உங்களை நான் பாராட்டுகிறேன்.

அமேசான் பகுதியின் பல இனத்தவர் இங்கு கூடியிருப்பதைக் காண்கிறேன். இந்தச் சந்திப்பை நான் ஆவலோடு எதிர்நோக்கியதால், பெரு நாட்டுப் பயணத்தை, இந்தச் சந்திப்போடு துவக்குகிறேன். அமேசான் பகுதியை அழிந்துவிடாமல் எவ்விதம் வாழமுடியும் என்ற ஞானத்தை உங்களிடமிருந்து நாங்கள் காற்றுக்கோலா வேண்டும். "இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்" (வி.ப. 3:5) என்று ஆண்டவர் மோசேயிடம் கூறிய சொற்கள் உள்ளத்தில் எதிரொலிக்கின்றன.

அமேசான் பகுதியில் வாழும் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவு நெருக்கடிகள் உருவாகியுள்ளன. இந்தப் பிரச்சனைகள் இம்மக்களின் குரல்வளையை நெருக்குவதால், இளையத் தலைமுறையினர் இங்கிருந்து குடிபெயர்வதற்குத் தூண்டப்படுகின்றனர்.

மண்ணின் மைந்தர்களுக்கே உரிய கலாச்சாரங்கள், மொழிகள், பாரம்பரியங்கள், உரிமைகள் மற்றும் ஆன்மீகம் அனைத்தின் மீதும் உண்மையான மதிப்பு கொள்வது முதலில் அவசியமாகிறது. அடுத்ததாக, இம்மண்ணில் வாழ்வோர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.

இறைவன் வழங்கிய பணியான, இவ்வுலகம் என்ற பொதுவான இல்லத்தைக் காக்கும் பணியை எவ்விதம் நிறைவேற்றுவது என்பதற்கு, நீங்களே வாழும் சாட்சிகள். இந்தப் பூமிக்கோளத்தைக் காப்பது, வாழ்வைக் காப்பதற்குச் சமம்.

வாழ்வைக் குலைக்கும் மற்றோர் ஆபத்து, மனித வர்த்தகம். "உன் சகோதரன் எங்கே?" (தொ.நூ. 4:9) என்று இறைவன் எழுப்பும் கேள்விக்கு, நாம் அனைவரும் செவிமடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! "வறியோருக்கு எதிராக நிகழ்ந்த கொடுமைகள் பழங்காலத்தில் மட்டுமல்ல; இன்றும் நிகழ்கின்றன" என்று புனித துரிபியுஸ் (Turibius) சொன்னார். அவர் சொன்னது, ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின், இன்றும் உண்மையாக உள்ளது.

இயற்கையோடு இயைந்த பழைய மரபுகளைப் பின்பற்றும் நோக்கத்தில், "தனித்துச் செல்வதை விரும்பித் தேர்ந்த மண்ணின் மைந்தர்கள்" (PIAV) என்ற குழுமத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இம்மக்கள் தேர்ந்துகொண்ட வாழ்க்கை முறை, நாம் இந்தப் பூமிக்கோளத்தின் முதலாளிகள் அல்ல என்பதைச் சொல்லித் தருகிறது. இவர்களது வாழ்க்கை முறை, அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக மாறுவதற்குப் பதில், நம் அன்றாட வாழ்க்கையாக மாறவேண்டும். முன்னேற்றம் என்ற பெயரில், இம்மக்களைத் தனிமைப்படுத்தி, அவர்களது சந்ததியினரை குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் கொடுமையான முயற்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.

குடும்பம் என்ற அடித்தளத்தையும், இயற்கையையும் சார்ந்திருக்கும் அமேசான் இனத்தவரின் வாழ்க்கை முறை, உயிரைப் போற்றிக் காப்பதற்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது. "எங்கள் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், பள்ளிகளில் எங்கள் பாரம்பரியங்களும், மொழிகளும் மறக்கப்படும் வகையில் கல்வி புகட்டப்படுகிறது. எங்கள் மூதாதையரின் ஞானத்தை இழக்க எங்களுக்கு விருப்பமில்லை" என்று Yésicaவும் Hectorம் கூறியது, மிக முக்கியமான ஒரு கருத்து.

நமது கல்வித்திட்டம், சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்கவேண்டும்; பாலங்களைக் கட்டவேண்டும். என் சகோதர ஆயர்களிடம் நான் விண்ணப்பிக்கிறேன். அமேசானின் மிக தூரமானப் பகுதிகளில் தலத்திருஅவை ஆற்றும் பணியில், இம்மக்களின் கலாச்சாரங்களையும், மொழிகளையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அமேசானின் அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் மத்தியில் நற்செய்தியைப் பறைசாற்ற வந்த பல இறைப்பணியாளர்கள், உங்கள் கலாச்சாரத்தையும் பாதுகாக்க முயன்றனர்.  கிறிஸ்துவே ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தில் வேரூன்றி, அதன் வழியே அனைத்துலகையும் புதுப்பிக்கும் வழியைக் காட்டினார். உங்களிடம் ஊன்றப்பட்ட கத்தோலிக்க நம்பிக்கையை, ஏனைய சக்திகள் வேரறுக்க அனுமதிக்காதீர்கள்!

அமேசான் பகுதிக்கே உரிய திருஅவையின் முகத்தை உருவாக்குவதில், ஆயர்கள், இறைப்பணியாளர்கள் அனைவரோடும் ஒத்துழைக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பல்வேறு கடினமானச் சூழல்களிலும், உங்கள் வாழ்க்கைத் தத்துவங்களைக் காப்பாற்ற, நீங்கள் காட்டிவரும் உறுதியான உள்ளம் எனக்கு நம்பிக்கையளிக்கிறது. இயற்கையோடு இயைந்து வாழமுடியும் என்பதை நீங்கள் கற்றுக்கொடுக்கிறீர்கள்!

இந்த மண்ணையும், உங்களையும் இறைவன் நிறைவாய் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்! எனக்காக செபிக்க மறவாதீர்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.