2018-01-18 16:16:00

பாப்பிறை பல்கலைக் கழகத்தில் திருத்தந்தையின் உரை


சன.18,2018. இந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாறு, சிலே நாட்டின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது. இங்கு பயின்ற ஆயிரக்கணக்கானோர் இந்நாட்டின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர். கல்வியறிவு, விசுவாசம், நீதி மற்றும் பிறரன்பு அனைத்தையும் எவ்விதம் ஒருங்கமைத்து, வளர்ச்சிக்கு உதவமுடியும் என்பதற்கு, இங்கு பயின்ற புனித அல்பெர்த்தோ ஹுர்த்தாதோ அவர்களை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

நாம் அமைதியில் ஒரே நாடாக ஒத்திணங்கி வாழவும், ஒரே சமுதாயமாக முன்னேறுவதற்குத் தேவையான சக்தியைக் கொண்டிருக்கவும், எதிர்நோக்க வேண்டிய சவால்கள் குறித்து, இப்பல்கலைக் கழகத் தலைவர் கூறியதை அடிப்படையாகக் கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

ஒரு நாடாக ஒத்திணங்கி வாழ்வதற்கு, கலந்துரையாடல் முக்கியமானது. ஏனெனில், உண்மை ஞானம் என்பது, ஆழ்ந்த சிந்தனை, கருத்துப் பரிமாற்றம், உரையாடல் போன்றவற்றின் கனியாகும். கல்வியறிவு என்பது, சிந்தனைகள் கொண்ட தலையையும், உணர்வுகளைக் கொண்ட இதயத்தையும், செயல்பாடுகளைக் கொண்ட கரங்களையும் ஒன்றிணைக்கிறது. இந்நிலையே, தனிப்பட்ட அளவில் மட்டுமல்லாமல், சமுதாயத்திலும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுகிறது. நம் உணர்வுகள், மற்றும் செயல்பாடுகள் குறித்து சிந்திக்க, தகுந்ததொரு கல்வி அவசியமாகிறது.

மாணவர் ஒருவர், தன் வருங்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திப்பதற்கு தயாரிப்பாக கல்வியறிவு இருக்கவேண்டும். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் திரவ நிலையையொத்த இன்றைய சமுதாயத்தில், மக்கள், தங்களை கட்டியெழுப்புவது குறித்த எண்ணம் மறைந்துவருகிறது. இன்றைய சமுதாயம், மேகத்தை ஒத்ததாக, அதாவது, நீராவியாகி, தன் நிலையானத் தன்மையை இழந்ததாக மாறிவருகிறது.

நிலையானத் தன்மை இழக்கப்பட்டு வருவதே, பொதுவாழ்வு குறித்த உள்ளுணர்வின் முக்கியத்துவம் காணாமல் போவதற்கும் காரணமாக உள்ளது.  நம் தனிப்பட்டத் தேவைகளையும், விருப்பு வெறுப்புக்களையும் தாண்டி, 'நாம்' என்ற வாழ்வை கட்டியெழுப்பும் அடிப்படைகளை உருவாக்கவேண்டும். இத்தகைய உள்ளுணர்வு இல்லையெனில், நாட்டைக் கட்டியெழுப்புவது மிகவும் கடினமாகிவிடும். 'நாம்' என்ற நிலையைக் கைவிட்டு, தனி மனித விருப்பு வெறுப்புக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வருங்காலம், நம் குழந்தைகளைப் பாதிப்பதுடன், வன்முறை நிறைந்ததாகவும், தேங்கிப்போனதாகவும் மாறிவிடும்.

இவ்விடத்தில், பல்கலைக்கழகங்களின் பணி, முக்கியத்துவம் நிறைந்ததாக மாறுகிறது. ஒரு சமுதாயமாக மனிதர்கள் முன்னேறுவதற்கு, பல்கலைக்கழகங்கள், ஒரு சக்தியாக செயலாற்றவேண்டும். வளர்ச்சியின் பாதையில் அனைவரும் இணைக்கப்படவேண்டும். ஆகவே, கல்வி நிலையங்கள், வகுப்பறைகளோடும், நூலகங்களோடும் தங்கள் பணி முடிவுற்றதாக நினைக்கக்கூடாது. தொடர்ந்து உதவும் வகையில் செயலாற்ற வேண்டும்.

இத்தகையைச் சூழலில், பழங்குடியினர், மற்றும் அவர்களின் நிலங்கள் குறித்து சிறப்பு அக்கறை வழங்கப்பட வேண்டும். அம்மக்களைக் குறித்த விவகாரங்களில் அவர்களின் கருத்துக்களுக்கே முதலிடம் கொடுக்கப்படவேண்டும். தேசிய ஒன்றிணைந்த வாழ்வுக்கு உதவியாக பல்கலைக்கழகத்தின் பணி அமைய வேண்டும்.

கல்வியறிவே பெரிதென எண்ணி, அதைப் பயன்படுத்தி, இயற்கையை நம் விருப்பம்போல் மாற்றியமைத்து, அதன்மேல் நம் ஆதிக்கம் ஓங்கவேண்டும் என்ற வகையில் செயலாற்றும் சோதனைகள் எழலாம். ஆனால், நீதியை, நன்மையை, அழகை, உண்மையைத் தேடிச்சென்ற நம் முந்தையத் தலைமுறையினருக்கு உதவிய இயற்கையின் முக்கியத்துவத்தை நாம் இழந்துவிடக் கூடாது.

ஆகவே, முரண்பாடுகளைக் கைவிட்டு, கலந்துரையாடல்களை மேற்கொள்வோம். ஒரே சமுதாயமாய், வளர்ச்சியை நோக்கி, ஒருங்கிணைந்த தேசிய வாழ்வை நோக்கியப் பாதையில் கரங்களை இணைப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.