2018-01-18 15:23:00

சிலே நாட்டின் தெமுகோவில் பூர்வீக இனத்தவருக்கு திருப்பலி


சன.18,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுவரும் சிலே நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதியிலும், அர்ஜென்டீனா நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும், மபுக்கே (Mapuche) பூர்வீக இன மக்கள் பெருமளவாக வாழ்ந்து வருகின்றனர். மபுக்கே மக்கள், அக்காலத்தில், இஸ்பானிய காலனி ஆதிக்கத்தை, கெரில்லாப் போர் யுக்திகளால் கடுமையாய் எதிர்த்து, இஸ்பானியப் படைகளை விரட்டியடித்து, தங்கள் நிலத்தை தக்க வைத்துக்கொண்டவர்கள். 1818ம் ஆண்டில் சிலே நாடு, இஸ்பானியர்களிடமிருந்து விடுதலை அடைந்த பின்னரும், மபுக்கே மக்களின் கிளர்ச்சி தொடர்ந்து இடம்பெற்றது. 1860களில், இம்மக்களின் பகுதியை சிலே இராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதன் பலனாக, இம்மக்களின் பெருமளவான நிலப்பகுதி, இராணுவத்திடமும், அப்பகுதியில் குடியேறியவர்களிடமும் கொடுக்கப்பட்டது. இந்த மக்களின் எஞ்சியுள்ள பகுதியைப் பாதுகாக்கவும், இந்த இன மக்களின் கல்விக்காக உதவித்தொகை வழங்குவது உட்பட, சில வளர்ச்சித் திட்டங்கள் அண்மைக் காலங்களில் எடுக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், மபுக்கே மக்கள் வாழும் பகுதி, சிலே நாட்டில் மிகவும் வறிய பகுதிகளில் ஒன்றாக நோக்கப்படுகின்றது. மேலும், மபுக்கே இனத்தவர், சிலே அதிகாரிகளால் உரிமை மீறப்படும் மக்களாகவும், கருதப்படுகின்றனர். தங்கள் பகுதியில் வாழ்கின்ற வேறு இனத்தவர் சட்டத்திற்குப் புறம்பே குடியேறியவர்கள் என்று சொல்லி, அண்மை ஆண்டுகளாக, மபுக்கே இனத்தவரில் ஒரு குழுவினர், வாகனங்களை எரித்தல் உட்பட, வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இவர்கள், பத்துக்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு தீ வைத்துள்ளனர். எனவே, மப்புக்கே மக்கள், வன்முறை மோதல்களால் கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

சிலே நாட்டின் Araucania தென் மாநிலத்தில் துன்புறும் மக்களைச் சந்திப்பதற்காக, சனவரி 17, இப்புதன் காலையில், சந்தியாகோ நகரிலிருந்து, தெமுகோ சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். Araucania மாநிலத்தின் தலைநகரான தெமுகோ (Temuco) நகரின் Maquehue விமானத்தளத்தில், உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு, திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை. ‘மக்களின் முன்னேற்றத்திற்காக’என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியில், ஏறத்தாழ ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் விசுவாசிகள் கலந்துகொண்டனர். மபுக்கே இனத்தவர் தவிர, சிலே நாட்டின் பல்வேறு பூர்வீக இன மக்களும், தங்களின் பலவண்ண மரபு ஆடைகளில் இத்திருப்பலியில் கலந்துகொண்டதைக் கண்டபோது, அந்த எளிய மக்களின் ஆழ்ந்த விசுவாசத்தை உணர முடிந்தது. திருப்பலி மேடை, சிறிய மரத்தூண்களால், மிக எளியமுறையில் அமைக்கப்பட்டிருந்தது. திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றிய, Maquehue விமானத்தளத்தோடு ஒட்டியுள்ள பகுதி, 1973க்கும், 1990ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஏராளமான பூர்வீக இனத்தவர் சித்ரவதைக்கு உள்ளான தடுப்பு முகாமாக பயன்படுத்தப்பட்டது. சிலே இராணுவ அதிபர் சர்வாதிகாரி அகுஸ்தே பினோஷேயின் இராணுவ ஆட்சியில் இது நடந்தது. இந்த இடம் அரசுக்கு அல்ல, தங்களுக்கே சொந்தம் என்றும், கடுமையான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற இந்த இடத்தில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மபுக்கே புரட்சியாளர்கள், கடந்த வாரத்தில், சந்தியாகோ நகரில் மூன்று ஆலயங்களைத் தீ வைத்து தாக்கினர் என்று சொல்லப்படுகின்றது. அதனால், திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றிய இந்தப் பகுதியில் ஏறத்தாழ நான்காயிரம் காவல்துறையின் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். திருத்தந்தையும் இத்திருப்பலி மறையுரையில், மனித உரிமை கடுமையாக மீறப்பட்ட இந்த இடத்தில் துன்புற்றோர், இறந்தோர் மற்றும், பல அநீதிகளை ஒவ்வொரு நாளும் சுமப்போர் ஆகிய அனைவருக்காகவும், இத்திருப்பலியை ஒப்புக்கொடுக்கின்றேன் என்று கூறினார். இறந்த எல்லாருக்காகவும், சிறிதுநேரம் மௌனமாகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், சிலே நாட்டின் தென் பகுதியில் வாழ்கின்ற மபுக்கே இன மக்கள், ஈஸ்டர் தீவிலிருந்து வந்துள்ள Rapanui இன மக்கள், Aymara, Quechua, Atacameños மற்றும் ஏராளமானோரைச் சிறப்பான முறையில் வாழ்த்துகிறேன் என்று, இத்திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.