2018-01-18 10:00:00

அருள்பணியாளர், துறவியருக்கு திருத்தந்தையின் உரை


சன.17,2018. அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இன்று நாம் வாசித்த நற்செய்தியில், மனம் தளர்ந்த பேதுரு, இரக்கம் காட்டப்பட்ட பேதுரு, உருமாற்றமடைந்த பேதுரு என்ற மூன்று தருணங்களை நினைத்துப் பார்க்கலாம்.

1. மனம் தளர்ந்த பேதுரு.

நமது நற்செய்திகள், உண்மை வாழ்வை உள்ளபடியே காட்டுகின்றன. அவற்றை, அழகான வண்ணம் கொண்டு தீட்டவில்லை. இயேசுவின் மரணம், சீடர்களை பெரிதும் நிலைகுலையச் செய்தது. அவர்கள் தங்கள் பழைய வாழ்வுக்குத் திரும்பினர். அங்கும், இரவெல்லாம் மீன்பிடிக்க முயன்றும், ஒன்றும் கிடைக்காமல், காலியான வலைகளுடன் திரும்பினர். இயேசுவின் மரணம் அவர்களிடம் உருவாக்கியிருந்த வெற்றிடத்தை காலியான வலை சித்திரிக்கிறது.

பிரச்சனைகளும் போராட்டங்களும் எழும்போது, சீடர்களைப்போல் நாமும் நொறுங்கிப்போகிறோம். சிறுவர், சிறுமியர் திருஅவைப் பணியாளர்களால் தவறான முறையில் நடத்தப்பட்டபோது, இத்தகையப் போராட்டத்தை நீங்கள் உணர்ந்தீர்கள். அவ்வேளையில், துறவியாக, அருள்பணியாளராக மக்கள் உங்களை அடையாளம் கண்டபோது, அவர்களின் ஏளனம், கோபம் ஆகியவற்றை நீங்கள் சந்தித்தீர்கள். தவறு செய்தவர்கள் சார்பில் மக்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு இறைவன் நமக்குத் துணிவைத் தர மன்றாடுவோம்.

நமது சமுதாயங்கள் மாறி வருகின்றன. நான் இளவயதில் கண்ட சிலே நாட்டிற்கும், இன்றைய சிலே நாட்டிற்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளன. இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க இயலாமல் நாம் தடுமாறுகிறோம். சில வேளைகளில், எதிர்காலத்தைச் சந்திக்கப் பயந்து, இறந்த காலத்தில் நம்மை நாமே பூட்டிக்கொள்கிறோம். நாம் விரும்பினாலும், விரும்பாவிடினும் மாற்றங்களை நாம் சந்தித்தே ஆகவேண்டும்.

2. இரக்கம் காட்டப்பட்ட பேதுரு.

துடிப்பும், தன்னம்பிக்கையும் அதிகம் கொண்டிருந்த பேதுரு, தானும் ஒரு பாவி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அத்தருணம், அவர் வாழ்வில் முக்கியமான தருணமாக அமைந்தது. நாம் ஒவ்வொருவரும் தனி நபர்களாக, திருஅவையாக இத்தகைய அனுபவத்தைப் பெறலாம்.

அவர்கள் உணவருந்தியபின், இயேசு, சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். (யோவான் 21:15) "நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்ற கேள்வி வழியே, இயேசு பேதுருவை, அவரது பலவீனம், பாவம் ஆகியவற்றிலிருந்து வெளிக்கொணர முயல்கிறார்.

இக்கேள்வியை இயேசு பேதுருவிடம் மீண்டும், மீண்டும் கேட்டதால், பேதுருவிடமிருந்து எதார்த்தமான, தன்னிலை உணர்ந்த பதில் இறுதியில் வெளிவந்தது: "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். (யோவான் 21:17) இந்தப் பதிலுக்குப் பின், இயேசு, பேதுருவை ஒரு திருத்தூதராக உறுதிப்படுத்துகிறார்.

எது  நம்மை திருத்தூதர்களாக உறுதிப்படுத்துகிறது? இறைவனின் கருணை மட்டுமே. நாம் அருள்பணியாளராக, துறவியாக இருப்பதற்கு, நாம் மற்றவர்களைவிட சிறந்தவர்கள் என்பது காரணம் அல்ல; மாறாக, நாம் இறைவனின் கருணையைப் பெற்றவர்கள் என்பது மட்டுமே காரணம். நாம் காயப்பட்டவர்கள், பலவீனமானவர்கள் என்ற உணர்வே நம்மை விடுதலை செய்யும். இயேசு கிறிஸ்துவில் நம் காயங்களும் உயிர்த்தெழும்.

நாம் 'சூப்பர்' நாயகர்களாக, அளவற்ற திறமை கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று இறைமக்கள் எதிர்பார்ப்பதில்லை; மாறாக, பரிவுள்ளம் கொண்ட மேய்ப்பராக, உதவிக்கரம் நீட்டுபவராக, துன்புறுவோருக்கு நேரம் ஒதுக்குபவராக இருக்கவேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றனர்.

3. உருமாற்றமடைந்த பேதுரு

தன் காலடிகளை இயேசு கழுவக்கூடாது என்று தடுத்து நிறுத்திய பேதுரு, அந்தச் செயல் வழியே திருஅவையைக் குறித்து இயேசு சொல்லித்தந்த ஒரு பாடத்தைப் பயின்றார். காயப்பட்டத் திருஅவை, தன் காயங்கள் கழுவப்பெற்று, காயப்பட்டிருக்கும் மனித சமுதாயத்திற்குப் பணியாற்ற செல்லவேண்டும் என்பதே அந்தப் பாடம்.

பசித்தோருக்கு, சிறையிலிருப்போருக்கு, ஆடையற்றோருக்கு, வீடற்றோருக்கு உதவி செய்வது, இறைவனுக்குப் பணிசெய்வது என்பதை, திருஅவை உணர்கிறது (மத்தேயு 25:35) இத்தகைய உதவிகளை, பரிதாபத்தினால் உந்தப்பட்டு செய்யும்போது, நாம் பிறரைவிட உயர்ந்தவர்கள் என்று எண்ணத் தோன்றும். அதற்கு மாறாக, நோயுற்றோர், கைதிகள், வீடற்றோர் அனைவரையும் நம்முடன் சமமாக அமர்ந்து, விருந்துண்ண வைப்பதே, இறையரசின் அடையாளமாக அமையும்.

நமது பணியும், அர்ப்பணமும் இவ்வுலகை உன்னதமான உலகமாக மாற்றிவிடாது. மிகச் சிறந்த ஒரு சூழலையோ, உலகையோ அன்பு செய்ய நாம் அழைக்கப்படவில்லை; மனிதர்களை அன்பு செய்யவே அழைக்கப்பட்டுள்ளோம்.

கர்தினால் Raúl Silva Henríquez அவர்கள் எழுதிய ஒரு செபத்தில் இவ்வாறு கூறியுள்ளார்:

"ஒவ்வொருநாளும் வாழ்கின்ற திருஅவையை நான் அன்பு செய்கிறேன். இயேசு கிறிஸ்துவை, நற்செய்தியை, அப்பத்தை, திருவிருந்தை, ஒவ்வொருநாளும் வாழும் கிறிஸ்துவின் பணிவான உடலை நான் அன்பு செய்கிறேன்.

எளியோரின் முகங்களை, போராட்டங்களையும் துன்பங்களையும் சந்திக்கும் மனிதர்களின் முகங்களை, ஒவ்வொருநாளும் வாழும் திருஅவையை நான் அன்பு செய்கிறேன்."

நீங்கள் அன்பு செய்யும் திருஅவை எப்படிப்பட்டது? இயேசுவின் காயங்களில் தன் காயங்களை உணரும் திருஅவையை நீங்கள் அன்பு செய்கிறீர்களா?

கார்மேல் அன்னை மரியா தன் மேலாடை கொண்டு உங்களைக் காப்பாராக! எனக்காக வேண்டிக்கொள்ள மறவாதீர்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.