2018-01-16 14:05:00

சிலே நாட்டு அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


சன.16,2018. அரசுத்தலைவரே, அதிகாரிகளே, பெண்மணிகளே, பெரியோரே, என் இளைமைப்பருவத்தில் என்னை வரவேற்று, வளர்த்த சிலே நாட்டில் காலடி பதிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

"சிலே நாடே, உன் நீல வானம் எவ்வளவு தூய்மையாக உள்ளது; உன் மீது வீசும் காற்று, எவ்வளவு தூய்மையாக உள்ளது; ஏதேன் தோட்டத்தின் உருவம் இதுவே" என்ற வரிகள், உங்கள் தேசியப்பண்ணில் இடம்பெறுகின்றன. இந்தப் பண், பல வாக்குறுதிகளையும், சவால்களையும், எதிர்கால நம்பிக்கையையும் தருகின்றது.

அண்மைய ஆண்டுகளில், சிலே நாடு, குடியரசாகி, முன்னேற்றத்தை அனுபவித்துள்ளது. இந்நாடு விடுதலையடைந்ததன் 200வது ஆண்டை இவ்வாண்டு கொண்டாடி வருகிறீர்கள். பல பிரச்சனைகள், தடைகள் மத்தியில், இந்நாட்டை நிறுவிய தந்தையரின் கனவை நீங்கள் நனவாக்கி வருகிறீர்கள்.

இவ்வேளையில், கர்தினால் சில்வா ஹென்றிகெஸ் (Cardinal Silva Henríquez)  அவர்கள், 'தெ தேயும்' (Te Deum) நன்றி வழிபாட்டில் கூறிய பொருள் செறிந்த வார்த்தைகளை நினைவுகூருகிறேன்: "தாயகத்தை உருவாக்குதல் என்ற அழகிய பணியில் நாம் அனைவரும் ஈடுபட்டுள்ளோம். நமது தாயகம், எல்லைகளற்ற விண்ணகத்திற்கு ஒரு முன்னடையாளம். நம் தாயகம் நம்முடன் துவங்குவது கிடையாது. அதை நாம் முன்னோரிடமிருந்து நன்றியுடன் பெற்றுக்கொண்டோம்; பெருமையோடும், அர்ப்பணத்தோடும் நம் சந்ததியினருக்கு விட்டுச் செல்வோம்."

ஒவ்வொரு தலைமுறையினரும், முந்தியத் தலைமுறையினரின் வெற்றிகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்லும் அதே வேளை, தங்கள் பார்வையை இன்னும் மேல்நோக்கிப் பதிக்கவேண்டும். நன்மைத்தனம், நீதி, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை ஒரே முறையில் வெல்லமுடியாது; அவற்றை, ஒவ்வொரு நாளும் உண்மையாக்கவேண்டும். உங்கள் முன் இருப்பது, உயர்ந்ததொரு சவால்: நீங்கள் அடைந்த குடியரசின் வழியே, இந்நாட்டில் வாழும் அனைவரும், ஓர் இல்லத்தில், ஒரு குடும்பத்தில் வாழ்வது போன்ற உணர்வைப் பெறவேண்டும்.

இவ்வேளையில், புனித அல்பெர்த்தோ ஹுர்த்தாதோ (St Alberto Hurtado) அவர்களின் கூற்றை நினைவில் கொள்வது நல்லது. "ஒரு நாடு என்றால், அதன் எல்லைகள், நிலம், மலைப்பகுதி, கடல், மொழி, பாரம்பரியம் என்ற அனைத்திற்கும் மேலாக, ஒரு பணியை நிறைவேற்றுவதில் அடங்கியுள்ளது" என்று அவர் கூறினார்.

அடிக்கடி மறக்கப்பட்டுவிடும் பழங்குடியினரின் குரலுக்குச் செவிமடுத்தல், அவர்களது கலாச்சாரத்தையும் உரிமைகளையும் பாதுகாத்தல் மிகவும் அவசியம். நல்லதொரு வாழவைத் தேடி, உங்கள் நாட்டுக் கதவைத் தட்டிக்கொண்டிருக்கும் குடியேற்றத்தாரருக்கு செவிமடுக்க வேண்டும். வளமான வாய்ப்புக்களை, குறிப்பாக, தரமான கல்வியை விரும்பும் இளைய தலைமுறையினருக்கு செவிமடுக்க வேண்டும். மிகுந்த ஞானமுடைய முதியோருக்கு செவிமடுக்க வேண்டும். இவர்களை கைவிட்டுவிடக் கூடாது. இவ்வுலகை வியப்புடன் நோக்கியவண்ணம், மதிப்புமிக்க எதிர்காலத்தை நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் குழந்தைகளுக்குச் செவிமடுக்க வேண்டும்.

இவ்வேளையில், சிறுவர், சிறுமியரைத் தவறான வழிகளில் பயன்படுத்திய திருஅவை தொண்டர்களை எண்ணி, வேதனையும், வெட்கமும் அடைகிறேன். என் சகோதர ஆயர்களுடன் இணைந்து, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். இத்தகையக் குற்றங்கள் இனி தொடராதவண்ணம் உறுதி பூணுவோம்.

நமது பொதுவான இல்லமான இந்த பூமிக்கும், இயற்கைக்கும் நாம் செவிமடுக்க வேண்டும். இயற்கையை அழிக்கும்வண்ணம் வளர்ந்திருக்கும் தொழில்நுட்ப ஆட்சிக்கு, மாற்று வழிகளை, மாற்றுச் சிந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.

என்ன நேர்ந்தாலும் வாழ்வது என்ற உறுதி, சிலே நாட்டின் ஆன்மாவாக, அழைப்பாக அமைந்துள்ளது. இந்த அழைப்பிற்கேற்ப, அனைத்து உயிரினங்களையும், குறிப்பாக, அழிவை எதிர்நோக்கியிருக்கும் உயிரினங்களை வாழவைப்பது, சிலே நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அழைப்பு.

சிலே நாட்டின் பாதுகாவலரான கார்மேல் அன்னை மரியா, உங்கள் கனவுகள் நனவாகும் வண்ணம், உங்கள் அனைவரோடும் உடன் நடப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.